Published : 03 Mar 2021 03:20 AM
Last Updated : 03 Mar 2021 03:20 AM

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற 2 இந்திய மலையேறும் வீரர்களுக்குத் தடை நேபாளம் உத்தரவு

புதுடெல்லி

எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஏறுவதற்கு 2 இந்திய மலையேறும் வீரர்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. எவரெஸ்ட் மலையுச்சியை தொட்டுவிட்டதாக 2 இந்தியர்களும் பொய் கூறியுள்ளதால் இந்த முடிவை நேபாள அரசு எடுத்துள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய மலைச்சிகரமாக இமயமலையில் உள்ள எவரெஸ்ட் மலைச் சிகரம் நேபாள நாட்டில் அமைந்துள்ளது. இந்த மலைச் சிகரத்தை எட்டி சாதனை படைக்க நாள்தோறும் ஏராளமான மலையேறும் வீரர்கள் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் எவரெஸ்ட் மலையில் ஏறுவதற்கு 2 இந்திய மலையேறும் வீரர்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. அண்மையில் இந்தியாவைச் சேர்ந்த மலையேறும் வீரர்கள் நரேந்திர சிங் யாதவ், சீமா ராணி ஆகியோர் எவரெஸ்ட் மலையில் உச்சியை அடைந்ததாக தெரிவித்து சான்றிதழ் பெற்றனர்.

ஆனால் இதுதொடர்பாக விசாரித்தபோது, அந்த 2 பேரும் பொய் கூறியும் பொய்யான புகைப்படங்களைக் காட்டியும் சான்றிதழைப் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் பெற்ற சான்றிதழை திரும்பப் பெற நேபாள கலாசாரம், சுற்றுலா மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. மேலும் அந்த 2 இந்திய மலையேறும் வீரர்கள் எவரெஸ்டில் ஏற தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

எவரெஸ்ட் மலை உச்சியில் ஏறியதால் நரேந்திர சிங் யாதவுக்கு, மத்திய அரசு டென்சிங் நார்கே விருதை அளிக்க கடந்த ஆண்டு பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் எவரெஸ்டில் ஏறியதாக அவர்கள் பொய் கூறியுள்ளதால் அந்த விருதுப் பட்டியலை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது.

இதுகுறித்து நேபாள கலாச்சாரம், சுற்றுலா மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை இணைச் செயலரும், விசாரணைக் குழுத் தலைவருமான குமார் கொய்ராலா கூறும்போது, “எவரெஸ்ட் மலையுச்சியில் ஏறியதாக இருவரும் பொய்யான புகைப்படங்களை சமர்ப்பித்து ஏமாற்றியுள்ளனர். இதுதொடர்பாக ஷேர்ப்பாக்களிடம் (மலையேற உதவும் தொழிலாளர்கள்) விசாரணை நடத்தியதில் அவர்கள் பொய் கூறியது தெரியவந்துள்ளது. எனவே 2 இந்தியர்களும் எவரெஸ்டில் ஏறத் தடை வித்துள்ளோம். மேலும் ஷேர்ப்பா தவா என்பவருக்கு 50 ஆயிரம் நேபாள ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x