Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் வேண்டுகோள்

தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த பிப்.26-ம் தேதி முதல் அமலில் உள்ளன. இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில், தேர்தல் விதிமுறைகளைக் கடைபிடிப்பது தொடர்பான அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அதில் மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் பங்கேற்று பேசியது:

வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள், தங்களின் கட்சிக் கூட்டங்களுக்கும், தற்காலிக அலுவலகம் அமைத்தல், வாகனங்கள் மற்றும் ஒலிபெருக்கி பயன்பாடுகளுக்கும் அனுமதி பெறுவது தொடர்பாக https://suvidha.eci.gov.in என்ற இணையதளம் வழியாகவோ, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேரிலோ விண்ணப்பிக்கலாம்.

நிகழ்ச்சி நடப்பதற்கு 48 மணி நேரம் முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். ஒப்புதல் வழங்கிய 72 மணி நேரம் வரை கட்சிக் கூட்டம், ஒலிபெருக்கி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். ஒரே இடத்தில் கூட்டம் நடத்தவோ அல்லது ஒலிபெருக்கி அமைக்கவோ பலர் மனு செய்யும் பட்சத்தில் முதலில் மனு செய்தவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களை ‘சிவிஜில்’ செயலி மூலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம். மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் பறக்கும் படை மற்றும் குழுக்களை கண்காணிப்பதற்காக ரிப்பன் மாளிகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதில், கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-7012-ல் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுக்கூட்டங்களில் பிறர் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசுவதோ, முழக்கங்கள் எழுப்புவதோ, பிற மதத்தினர், இனத்தினர் அல்லது தனிப்பட்ட நபரை தாக்கி பேசுவதோ கூடாது.

அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்தத் தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x