Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

அமைகிறதா புதிய கூட்டணி? கமலுக்கு சரத்குமார் அழைப்பு

சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் நேரில் சந்தித்து பேசினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ரவி பாபு ஆகியோர் நேற்று காலை 10 மணிக்கு நேரில்சந்தித்தனர். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது. சந்திப்புக்கு பிறகு, சமக தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

நல்லவர்களும், ஒருமித்த கருத்து உள்ளவர்களும் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்ற சூழலில் கமல்ஹாசனை நேரடியாக சந்தித்து அவருடைய கருத்துகளை கேட்டறிந்துள்ளேன். இதுதொடர்பாக, அவருடைய கட்சியின் பொறுப்பாளர்களுடன் பேசிய பிறகு நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

அதிமுக கூட்டணியில் இருந்து மாற காரணம் என்ன?

10 ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் பயணித்துள்ளேன். இதுவரை யாரும் பேச வரவில்லை. எவ்வளவு நாள்தான் காத்திருக்க முடியும்.

3-வது அணியின் முதல்வர் வேட்பாளர் யார்?

முதலில் பேச்சுவார்த்தைகள் முடிய வேண்டும். முதல்வர் வேட்பாளர் யார் என்று சொல்வதை விட முதலில் வெற்றி பெறுவதற்கான வேலைகளை தொடங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் மனதிலும் இருக்கிறது.

நாம் தமிழர் கட்சி, அமமுக கூட்டணியில் வருவதற்கான வாய்ப்புள்ளதா?

யார் வருவதற்கு வாய்ப்புள்ளதோ, யாரெல்லாம் மாற்றத்தை விரும்புகிறார்களோ அவர்கள் இணைவதற்கான வாய்ப்புள்ளது.

பின்னர், கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட தகுதியான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க மார்ச் 1-ம் தேதி முதல் வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளது. மார்ச் 7-ம் தேதி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலும் மார்ச் 3-ம் தேதியில் இருந்து பிரச்சாரமும் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நீங்கள் தானா அல்லது சமரசம் செய்யப்படுமா?

இப்போதைக்கு நாங்கள் முடிவு செய்து இருப்பது அப்படி தான். அவ்வாறாக தான் இருக்கும். நாங்கள் சமரசம் செய்வதற்கு பெயர் போனவர்கள் அல்ல. தேவைப்படும் போது நல்லவைக்காக மட்டுமே சமரசம் செய்து இருக்கிறோம்.

3-வது அணி இதுவரை தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லையே?

நீங்கள் சொல்வது சரித்திரம். நாங்கள் சொல்வது மாற்றம். சரித்திரம் நிகழ்ந்துவிட்டது, மாற்றம் நிகழ போகிறது.

சக்கர நாற்காலி சர்ச்சை எழுந்துள்ளது குறித்து உங்களுடைய கருத்து?

யாருக்கு கோபம் வருகிறதோ அவர்கள் வயது, அனுபவத்தில் சிறியவர்களாக இருப்பார்கள். இன்று கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் நான் சொன்னதின் உள் அர்த்தத்தை புரிந்து இருப்பார். நான் என்னுடைய முதுமை பற்றி தான் சொன்னேன்.

டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா? அழைப்பு விடுத்தீர்களா?

பார்ப்போம். அழைப்பு விடுக்கப்படவில்லை. நாங்கள் புதிய கட்சி என்பதால் வெற்றியை நோக்கி நடைபோடும் வேகத்தில் இருக்கிறோம். நாங்கள் வரவேற்க தயாராக இருக்கும் கட்சியாக தான் இருக்க முடியும். கதவுகள் திறந்து இருக்கின்றன. மேகங்கள் சூழ்ந்து வருகின்றன. விரைவில் நல்மழை பெய்யும்.

காங்கிரஸ் தரப்பில் உங்களை அணுகியுள்ளார்களா?

அறிவிப்பே செய்துள்ளார்கள். அவையெல்லாம், நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x