Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் குறைந்த அளவு பேருந்துகளே இயங்கியதால் மக்கள் பாதிப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் சென்னையில் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, பேருந்துகளின்றி சாலையில் சென்ற வாகனங்கள். படம்: எம்.முத்துகணேஷ்

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக குறைந்த அளவு பேருந்துகள் மட்டுமே இயங்கின.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், ஊதிய உயர்வு, தற்காலிக பணியில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்நிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் போக்குவரத்துப் பணிமனையில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 350 பேருந்துகள் இயங்கி வருகின்றன. ஆனால் இவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று 150 பேருந்துகள் மட்டுமே இயங்கின. இயக்கப்பட்ட பேருந்துகளும் ஒரு முறை சென்று வந்து நிறுத்தப்பட்டன. மொத்தம் 40 சதவீத பேருந்துகள் மட்டுமே இயங்கியதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், கல்பாக்கம், தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய போக்குவரத்துப் பணிமனைகளில் இருந்து 30 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மற்றும் நடந்துநர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டனர்.

இதனால், திருவள்ளூர், திருத்தணி, பொதட்டூர்பேட்டை, ஆர்.கே.பேட்டை, ஊத்துக்கோட்டை, பொன்னேரி ஆகிய 6 பணிமனைகளைச் சேர்ந்த 256 பேருந்துகளில், 72 பேருந்துகளே நேற்று இயங்கின. அதே போல், ஆவடி, பூந்தமல்லி, பாடியநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள 320-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் 35 சதவீத பேருந்துகளே இயங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x