Published : 24 Feb 2021 03:16 AM
Last Updated : 24 Feb 2021 03:16 AM

குழந்தையின் தலையில்கூட ரூ.62 ஆயிரம் கடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து

தமிழகத்தின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. பிறக்கும் குழந்தையின் தலையில்கூட ரூ.62 ஆயிரம் கடன் உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

நாட்டு மக்களின் நலனை அறவே புறக்கணித்து, தொடர்ந்து முறைகேடுகள் செய்து, தம்மையும் தம்மைத் தாங்கிப் பிடிப்பவர்களை வளப்படுத்திக் கொள்வதற்காகவுமே, கடன் வாங்கி, தமிழக மக்கள் தலையில் ரூ.5.70 லட்சம் கோடி கடனை சுமத்தியுள்ளனர். இதற்காக முதல்வர் பழனிசாமிக்கும், நிதியமைச்சரும் துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கும் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2006-2011 வரையிலான திமுகஆட்சியில் வாங்கிய கடன் வெறும்ரூ.44 ஆயிரத்து 84 கோடி மட்டுமே. ஆனால் தற்போது அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்டுள்ள கடன் மட்டும் ரூ.3.55 லட்சம் கோடி.

திமுக ஆட்சியில் 10.5 சதவீதமாக இருந்த வருமானம், அதிமுகஆட்சியில் தற்போது 7.2 சதவீதமாக குறைந்து விட்டது. கரோனா பேரிடருக்கு முன்பே அதாவது 2018-ம் ஆண்டிலேயே ரூ.68 ஆயிரம் கோடி வருமானம் காணாமல் போய் நிதி நிலைமை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி விட்டது.

2003-ம் ஆண்டு தமிழக நிதிநிலை நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்டம் வந்த பிறகு தமிழக வரலாற்றில் கடனை வாங்கி கடனுக்கு வட்டி கட்டும் ஒரே அரசுஅதிமுக அரசு. இதுவா வெற்றி நடை போடும் தமிழகம். கடன் சுமையில் தள்ளாடும் தமிழகம் அல்லவா?

கரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வாடிய ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு உயிர் வாழ்வதற்கு நேரடி பணஉதவியை, பலமுறை மன்றாடிக்கேட்டும், வழங்க முன்வரவில்லை. ‘நிவர்’ புயல் உள்ளிட்டபேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவில்லை.

தற்போது ரூ.1000 கோடிக்கு மேல் மக்கள் பணத்தை எடுத்து, தண்ணீராக தாராளமாக வாரி இறைத்து, விளம்பரங்கள் வழங்குவதிலும் ஊழல் செய்து, தமிழகத்தின் நிதி ஆதாரத்தில் கை வைத்துள்ளார் முதல்வர்.

தேர்தலுக்கு முன் பணிகளை மேற்கொண்டு நிறைவேற்ற முடியாது என்று நன்கு அறிந்திருந்தும், கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.40 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட டெண்டர்களை விடுத்து அரசுகஜானாவை காலி செய்துள்ளார். இன்றைக்கு தமிழகத்தில் உள்ளஒவ்வொருவர் தலையிலும் ஏன் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரத்துக்கும் மேல் கடனை அதிமுக அரசு சுமத்திவிட்டுச் செல்கிறது. தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் உரையை புறக்கணித்த திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக்

சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாசிக்கத் தொடங்கியதும், எழுந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேச வாய்ப்பு கேட்டார். அதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர் பி.தனபால், "நீங்கள் பேசினாலும் பேரவைக் குறிப்பில் பதிவாகாது" என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று முழக்கமிட்டனர். இதனால் பேரவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து பேச பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததால் பட்ஜெட் உரையைப் புறக்கணித்து திமுகஉறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். இந்த கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x