Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

கேளம்பாக்கம், செங்கை நெடுஞ்சாலைகளில் சாலையோர மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை

கேளம்பாக்கம் - வண்டலுார் மற்றும் செங்கல்பட்டு-திருப்போரூர் இடையேயான நெடுஞ்சாலைகளில், தெரு மின் விளக்குகளை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை 17 கி.மீ. நீளம் கொண்டது. இரு பகுதிகளுக்கிடையே புதுப்பாக்கம், மாம்பாக்கம், மேலக்கோட்டையூர், இரத்தினமங்கம், கண்டிகை, நெடுங்குன்றம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் ஏராளமான அடுக்குமாடிகள் உள்ளன. இதனால், மேற்கண்ட சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது.

ஆனால், இது தெரு விளக்குகள் இல்லாத சாலையாக உள்ளது. இதனால், இரவில் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக சோனலுார், கீழக்கோட்டையூர், மேலக்கோட்டையூர், கண்டிகை இணைப்புகளின் வளைவுகளில் விபத்துகளால் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகிஉள்ளதாக காவல் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதியில் இரவு நேரத்தில், வழிப்பறி உட்பட சமூக விரோத செயல்கள் அதிகம் நடக்கின்றன.

அதேபோல் செங்கல்பட்டு-திருப்போரூர் இடையே உள்ள 29 கி.மீ. நீள நெடுஞ்சாலையில் சுமார் 14 கி.மீ. நீள சாலை வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளது. இச்சாலையிலும் சாலையோர மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பெண்களை வாகனத்தில் அழைத்துச் செல்ல கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும், பல்வேறு கிராமச் சாலைகள் இணையும் பகுதிகளில் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, தேவையான இடங்களில் சாலையோர மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை மற்றும் வட்டார வளர்ச்சி நிர்வாகங்கள் கூறும்போது, ‘‘உள்ளாட்சி அமைப்புகள்தான் மின்விளக்குகளை அமைத்து பராமரிக்க வேண்டும். மேலும், மின் விளக்கும் அமைக்க போதிய நிதி இல்லை. தெரு மின்விளக்குகளுக்காக ஏற்கெனவே பல லட்சம் ரூபாய் மின் வாரியத்துக்கு பாக்கி உள்ளது. இதில், புதியதாக மின்விளக்குகளை அமைக்க வசதி இல்லை. எனினும் பல பகுதிகளில் மின் விளக்குகளை அமைத்து வருகிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x