Published : 19 Feb 2021 03:22 AM
Last Updated : 19 Feb 2021 03:22 AM

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான முதல்நிலை தேர்வுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி தமிழக அரசு பயிற்சி மையம் ஏற்பாடு

சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி வழங்க, தமிழக அரசு பயிற்சிமையம் ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலரும், பயிற்சித் துறையின் டைரக்டர் ஜெனரலுமான வெ.இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அட்டவணை வெளியீடு

தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சிமையம் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமை வழிச்சாலையில் செயல்பட்டு வருகிறது. மத்தியஅரசு பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) நடத்தப்படும் அகில இந்தியக் குடிமைப் பணிகளுக்கான (ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ்) முதல்நிலைத் தேர்வில்தமிழக இளைஞர்கள் கலந்துகொள்ள ஏதுவாக இந்த பயிற்சிமையத்தில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி அகில இந்தியகுடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள் பிப்.8-ம் முதல் பின் வரும் அட்டவணையின்படி நடைபெற்று வருகின்றன.

காலை 10.15 மணி முதல் 11.30 மணி வரை - முதல் பாட நேரம். காலை 11.45 மணி முதல் மதியம் 1 மணி வரை - இரண்டாவது பாட நேரம். பிற்பகல் 2 மணி முதல் 3.15 மணி வரை - மூன்றாவது பாட நேரம். பிற்பகல் 3.30 மணி முதல் 4.45 மணி வரை - நான்காவது பாட நேரம்.

முதல்நிலைத் தேர்வு பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்திய வரலாறு, தேசிய விடுதலைப் போராட்டம், புவியியல், அரசியல், பொருளாதாரம், அறிவியல், சுற்றுச்சூழல், நடப்பு நிகழ்வுகள் ஆகியவை தொடர்பான பாடங்கள் நடந்து வருகின்றன. எனவே, ஆர்வமுள்ள மாணவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி நேரடி இணைய வழி வகுப்பு மற்றும் ‘AICSCC TN’ என்ற யூடியூப் பக்கம் மூலமாகவும் படித்து பயன்பெறலாம்.

நேரடிப்பயிற்சி பெற முடியாதவர்கள் தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் பார்த்தும் கேட்டும் பயன்பெறவே இத்தகைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தவசதியை பணிக்குச் செல்பவர்களும் பிற மாநிலங்களில் வசிக்கும்தமிழர்களும் தங்கள் ஓய்வு நேரத்தில் பார்த்தும் பயனடைய முடி யும்.

இவ்வாறு இறையன்பு கூறி யுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x