Published : 09 Feb 2021 03:13 AM
Last Updated : 09 Feb 2021 03:13 AM

நல்லூர் வயல் பெயரைமீண்டும் வைக்க ஆட்சியரிடம் மனு

கோவை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

மத்வராயபுரம் அருகேயுள்ள நல்லூர் வயல் பொதுமக்கள், தேவராஜ் என்பவர் தலைமையில் வந்து அளித்த மனுவில், ‘‘கடந்த 1992-ம் ஆண்டு எங்கள் பகுதியில் நல்லூர் வயல் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அஞ்சல் நிலையம், 1995-ம் ஆண்டு காருண்யா நகர் என பெயர் மாற்றப்பட்டது. பின்னர், அரசுத் துறைகளின் உதவியோடு, நல்லூர் வயல் என்ற பெயரை, காருண்யா நகர் என மாற்றியுள்ளனர். எங்கள் பகுதியில் உள்ள வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலும், காருண்யா நகர் என்ற பெயரே உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகத்தினர் நமது பாரம்பரிய பெயர், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை காக்கும் வகையில் அனைத்து அரசுத் துறைகள், அரசு அட்டைகள் உள்ளிட்ட அனைத்திலும் நல்லூர் வயல் என்ற பெயரையே மீண்டும் இடம்பெறச் செய்ய வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

பீளமேடு ஏ.டி காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘விளாங்குறிச்சி சாலையில் இருந்து ரொட்டிக்கடை மைதானத்துக்கு செல்லும் வழியில், பட்டத்தரசியம்மன் விநாயகர் கோயிலுக்கு எதிரே அரசு மதுக்கடை உள்ளது. இந்த கடை மூடப்பட்டிருக்கும் சமயங்களிலும் மது விற்பனை நடக்கிறது. பொதுமக்கள், பெண்கள் அச்சத்துடனே கடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, இந்த மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x