Published : 06 Feb 2021 03:18 AM
Last Updated : 06 Feb 2021 03:18 AM

விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு

தமிழக கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,410 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் இருந்து 16.43 லட்சம் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றுமுதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார். உழவர்களின் துயரங்களைத்துடைக்கும் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்த மழைகளில் காவிரி பாசன மாவட்டங்கள், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாது என்ற நிலை நிலவி வந்த சூழலில்தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசின்இந்த அறிவிப்பு விவசாயிகளின் பொருளாதார நெருக்கடிகளை ஓரளவு தீர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை தேமுதிக வரவேற்கிறது. ஏற்கெனவே நிவர்,புரெவி புயல்களால் வாழ்வாதாரமின்றி தவித்து வந்த விவசாயிகளுக்கு விவசாய கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: கடன் தள்ளுபடி கோரி நீண்ட காலமாக போராடிவரும் விவசாயிகளுக்கு இது ஓரளவு ஆறுதல் அளிக்கும். ஆனால், இந்தக் கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகளின் சுயசார்புக்கு உதவாது.

உற்பத்தி செய்யும்வேளாண் விளை பொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை ஏற்று குறைந்தபட்ச ஆதரவுவிலை நிர்ணயித்து, அரசு கொள்முதல் செய்யும் சட்டப்பூர்வ ஏற்பாடுகள் அரசு செய்ய வேண்டும். தேசிய வங்கிகளிலும், கிராமிய வங்கிகளிலும் நிலுவையாக உள்ளவிவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசுக்கு, மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி என தமிழக முதல்வர் அறிவித்திருப்பது துன்பத்தில் இருந்த விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தது போல் இருக்கிறது. அது மட்டுமல்ல இது தமிழக அரசின் சாதனைப் பட்டியலில் பெரிய மைல் கல்லாகும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம்: பருவ மழையும் சீராக இருந்தது. விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையோடு இருந்த நிலையில் நவம்பர் மாதம் வீசிய புயல்களாலும், ஜனவரி மாதம் பெய்த எதிர்பாராத கனமழை காரணமாகவும் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் பல லட்சக்கணக்கான ஏக்கரில் அழிந்து போய் விவசாயிகள் பெருந்துயரத்துக்கு ஆளாயினர்.

விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று இன்று சட்டமன்றத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x