Published : 03 Feb 2021 03:15 AM
Last Updated : 03 Feb 2021 03:15 AM

மாற்றுக் கட்சியினர் விரிக்கும் வலையில் ரஜினி மன்ற உறுப்பினர்கள் சிக்க மாட்டார்கள் தமிழருவி மணியன் கருத்து

அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் ரஜினிகாந்தை பக்திப்பூர்வமாக நெஞ்சில் நிறுத்தி நேசிக்கும் மக்கள் மன்ற உறுப்பினர்கள், எவர் விரிக்கும் வலையிலும் சிக்க மாட்டார்கள் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த பலர் காந்திய மக்கள் இயக்கத்தில் இணைந்து பணியாற்ற விரும்பி என்னை தொடர்பு கொள்கின்றனர். ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு அன்புடன் ஒன்றை உணர்த்த விரும்புகிறேன்.

பாழ்பட்ட அரசியலை பழுதுபார்க்கவே அரசியல் உலகில் அடியெடுத்து வைக்க முயன்றார் ரஜினி. அவரது கனவை நனவாக்க காலச்சூழல் இடம் தராத நிலையில், இப்போது அவர் கட்சி தொடங்குவதை தவிர்த்திருக்கிறார். மற்றபடி, ‘இனிமேல் நான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை’ என்று அவர் அறிவிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தை அவர் கலைக்கவும் இல்லை.

இந்த நிலையில், அவரது கூற்றின்படி சிஸ்டத்தை சீரழித்தவர்களிடமே சில ரசிகர்கள் சரண் அடைந்திருப்பதையும், சிலர் இளைப்பாறும் வேடந்தாங்கல் எதுவாக இருக்க முடியும் என்று அலைபாய்வதையும் கண்டு வருந்துகிறேன்.

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ஆள் பிடிக்கும் அநாகரிக அரசியலை அடியோடு வெறுக்கிறேன். காந்திய மக்கள் இயக்கம் இந்த சந்தர்ப்பவாத செயலில் மறந்தும் ஈடுபடாது என்று உறுதிபட அறிவிக்கிறேன். காந்திய மக்கள் இயக்கம் ரஜினி மக்கள் மன்றத்தின் சகோதர அமைப்பாக தொடர்ந்து செயல்படும். அவரவர் இடத்தில் இருந்தபடி கரங்கள் இணைந்து செயலாற்றுவோம். தரம் தாழ்ந்த, தன்னலம் வாய்ந்த அரசியலை எப்போதும் நான் நடத்தியது இல்லை. எந்த லாவணிக் கச்சேரியிலும் நேரத்தை விரயமாக்காமல் ஆக்கப்பூர்வமான, அர்த்தமுள்ள பணிகளில் காந்திய மக்கள் இயக்கம் முன்பைவிட முனைப்பாக ஈடுபடும்.

திருப்பூரில் பொதுக்குழு மார்ச் 7-ம் தேதி கூடுகிறது. நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தாலும், காந்திய மக்கள் இயக்கம் அவருடன் சேர்ந்தே பயணிக்கும். அவர் அரசியலுக்கு வந்தாலும், வராமல் விலகி இருந்தாலும் பக்திப்பூர்வமாக அவரை நெஞ்சில் நிறுத்தி நேசிக்கும் எந்த மன்ற உறுப்பினரும், எவர் விரிக்கும் வலையிலும் சிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x