Published : 02 Feb 2021 03:17 AM
Last Updated : 02 Feb 2021 03:17 AM

மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.63 ஆயிரம் கோடி திட்டமிட்டபடி 2025-ல் பணிகள் முடியும் என எதிர்பார்ப்பு

சென்னை

மத்திய பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு ரூ.63 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. விரைவில் வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

இதற்கிடையே, சென்னையில் 2-ம் கட்டமாக மாதவரம் - சிறுசேரி, மாதவரம் - சோழிங்கநல்லூர், பூந்தமல்லி - விவேகானந்தர் இல்லம் என 3 வழித்தடங்களில் சுமார் ரூ.69 ஆயிரம் கோடியில் 119 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்குவதற்கான திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு ரூ.63 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள பல்வேறு பகுதிகளாக பிரித்து நிறுவனங்களை தேர்வு செய்து பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கோயம்பேடு - புழுதிவாக்கம் பகுதிகளை இணைக்கும் வகையில் 12 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை மேற்கொள்ள டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் சாய்நகர், இளங்கோ நகர், முகலிவாக்கம், டிஎல்எஃப், சத்யா நகர், வர்த்தக மையம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, புழுதிவாக்கம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும்.

இதற்கான பணிகளை மேற்கொள்ள அடுத்த 6 மாதங்களில்நிறுவனம் தேர்வு செய்யப்படும்.அனைத்து புதிய வழித்தடங்களிலும் இந்த ஆண்டு இறுதிக்குள்கட்டுமானப் பணிகள் தொடங்கிவிடும். தாமதமின்றி உடனுக்குடன் நிதி ஒதுக்கப்படுவதால், ஏற்கெனவே திட்டமிட்டபடி, 2-வது கட்டமெட்ரோ ரயில் திட்டப் பணிகளை அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் முடிக்க உள்ளோம். இது செயல்பாட்டுக்கு வரும்போது மொத்தம் 138 ரயில்கள் இயக்கப்படும். பெரும்பாலான ரயில்களில் 3 பெட்டிகள் இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x