Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

சுவாமிமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, மலைக்கோயிலிலிருந்து உற்சவ மண்டபத்துக்கு சுப்பிரமணியசுவாமி பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினார்.

இதையடுத்து, விழா நாட்களில் தினமும் காலை, மாலை இரு வேளையும் சுவாமி உட்பிரகார புறப்பாடு நடைபெற்றது.

தொடர்ந்து, தைப்பூச தினமான நேற்று காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, வைரவேல் அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர், காலை 10 மணியளவில் கோயில் உள்ளே உள்ள வஜ்ர தீர்த்தத்தில் தீர்த்தவாரியும், வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி உள்பிரகார புறப்பாடும் நடைபெற்றன.

பின்னர், இரவு கொடியிறக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல, திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று காலை பஞ்சமூர்த்தி சுவாமிகள் ஊர்வலமாக வந்து, காவிரி ஆற்றின் கரையில் எழுந்தருளினர். பின்னர், நேற்று மதியம் அஸ்திரதேவர் தீர்த்தவாரி கண்டருளினார்.

தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் உள்ள சுப்பிரமணியர் கோயிலில் நேற்று சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், விபூதி அலங்காரமும் நடைபெற்றது.

ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில்...

தைப்பூசத்தை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் நேற்று காலை 10 மணியளவில், மையாடுங்கண்ணி சமேத சந்திரசேகரர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளினார்.

பின்னர், வீதியுலாவாக வந்து, நிரவி சாலை அருகேயுள்ள பூச மண்டபத்தில் தீர்த்தவாரிக்காக எழுந்தருளினார். தொடர்ந்து, அங்குள்ள குளத்தில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் வி.வைத்திலிங்கம், நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

வேதாரண்யேஸ்வரர் கோயிலில்...

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக 10,000 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த குன்னலூர் கிராமத்தில் உள்ள 200 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்கு விளைந்த நெல்லை தைப்பூச நாளான நேற்று விவசாயிகள் அறுவடை செய்து, அதைக் கோட்டையாக கட்டி, வேதாரண்யத்துக்கு கொண்டு வந்தனர்.

வேதாரண்யம் மேலவீதியில் உள்ள களஞ்சியம் விநாயகர் கோயிலில் வைத்து, நெல் கோட்டைக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று, வேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஒப்படைத்தனர்.

பின்னர், அங்கு நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர்கள் வழங்கப்பட்டன. நெல் கோட்டையில் கொண்டு வரப்பட்ட நெல்லை அரிசியாக்கி சுவாமிக்கு இரண்டாம் காலத்தில் நைவேத்தியம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x