Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM

இந்திய கடலோர காவல்படை இயக்குநர் ஜெனரல் நடராஜனுக்கு குடியரசு தலைவரின் ‘பரம் விசிஷ்ட் சேவா’ விருது

இந்தியக் கடலோர காவல்படை யின் இயக்குநர் ஜெனரல் நடராஜனுக்கு குடியரசு தலைவரின் உயரிய விருதான ‘பரம் விசிஷ்ட் சேவா’ விருது வழங்கப்பட்டு உள்ளது. கடலோர காவல்படையின் இயக்குநர் ஒருவர் இவ்விருது பெறுவது இதுவே முதல் முறை.

ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று முப்படைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு குடியரசு தலைவர் விருது வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக, ராணுவம், விமானம் மற்றும் கடற்படையைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுகிறது. கடலோர காவல்படையைச் சேர்ந்தவர்களுக்கு இதுவரை விருது வழங்கப்படவில்லை.

இந்நிலையில், முதன்முறை யாக இந்தியக் கடலோர காவல் படையின் இயக்குநர் ஜெனரல் கே.நடராஜனுக்கு குடியரசு தலைவரின் உயரிய விருதான ‘பரம் விசிஷ்ட் சேவா’ விருது வழங்கப்பட்டு உள்ளது.

சென்னை பெரம்பூர் பகுதியில் பிறந்த நடராஜன், கடந்த 1984-ம் ஆண்டு இந்தியக் கடலோர காவல்படையில் பணியில்சேர்ந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உக்திகள் தொடர்பான முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். மேலும், ஊட்டியில் உள்ள வெலிங்டன் பாதுகாப்பு சேவை கல்லூரியிலும் பயின்று உள்ளார்.

கடலோர காவல் படையின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர். மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, கடலோர காவல்படையை வலுப்படுத்தும் வகையில், கடலோர காவல் படைக்காக 10 விமான தளங்கள், 20 நிலையங்கள், 2 மண்டல தலைநகர் ஆகியவற்றை உருவாக்கினார்.

கடந்த 2017-ம் ஆண்டு மேற்கு கடற்கரை பிராந்தியத்தில் கடத்த முயன்ற ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 1.5 டன் ஹெராயின் போதை மருந்தை பறிமுதல் செய்தார். இதற்காக, இவருக்கு சர்வதேச சுங்க அமைப்பு, விருது வழங்கி கவுரவித்தது. 2019-ம்ஆண்டு இந்தியக் கடலோர காவல்படையின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றார்.

பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x