Published : 22 Jan 2021 03:17 AM
Last Updated : 22 Jan 2021 03:17 AM

ஆஸ்திரேலியாவில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்பு

ஆஸ்திரேலியாவில் 2 மாதங்களுக்கும் மேலாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி, டி20 மற்றும் டெஸ்ட் தொடரை வென்று கோப்பையுடன் நேற்று காலை தாயகம் திரும்பியது. டெல்லி, மும்பை, பெங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் 2-வது முறையாக இந்தியஅணி வென்றது. அதிலும் ஆஸ்திரேலியாவின் கோட்டை எனக் கருதப்படும் பிரிஸ்பேன் மைதானத்தில் 32 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்திய அணி வரலாறு படைத்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய அணியினர் நேற்று காலை தாயகம் திரும்பினர்.

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மா, ஷர்துல் தாக்கூர், பிரித்வி ஷா ஆகியோர் மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கினர். அவர்களுக்கு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், ரசிகர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் விஜய் பாட்டீல், அஜின்கய நாயக், அமித் தானி, உமேஷ் கான்வில்கா ஆகியோர் வீரர்களை வரவேற்றனர். விமான நிலையத்திலேயே ரஹானே கேக்வெட்டி வெற்றியைக் கொண்டாடினார்.

பிரிஸ்பன் டெஸ்டில் ஹீரோவாகத் திகழ்ந்த ரிஷப் பந்த் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கினார். வலை பயிற்சி பந்து வீச்சாளராக சென்று ஒரு நாள், டி20, டெஸ்ட் ஆகிய 3 பிரிவுகளில் அறிமுகமாகி அசத்திய தமிழக வீரர் நடராஜன், பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.

அங்கிருந்து நடராஜனை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், சேலம் மாவட்டத்தில் உள்ள அவரின்சொந்த கிராமமான சின்னப்பம்பட்டிக்கு அழைத்துச் சென்றனர். பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ரவிச்சந்திர அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சென்னை விமான நிலையத்துக்கு இன்று காலை வந்து சேருகின்றனர்.

ஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிஈஸ்ட் பெங்கால் – மும்பை

நேரம்: இரவு 7.30

இடம்: கோவாநேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x