Published : 22 Jan 2021 03:17 AM
Last Updated : 22 Jan 2021 03:17 AM

பாட்மிண்டன் வரலாறும் இந்தியாவும்

இந்தியாவில் சமீப காலமாக மக்களிடையே பிரபலமாகி வரும் விளையாட்டு பாட்மிண்டன். சாய்னா நெவால், பி.வி.சிந்து, கிடாம்பி காந்த் என பலர் அடுத்தடுத்து சர்வதேச பாட்மிண்டன் போட்டிகளில் பட்டங்களையும், பதக்கங்களையும் வென்று வருவது, இதற்கு முக்கிய காரணமாகும்.

இந்தியாவில் பாட்மிண்டன் பிரபலமானது வேண்டுமானால் இப்போதாக இருக்கலாம். ஆனால் இந்த விளையாட்டு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தோன்றியிருக்கிறது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இந்தியா மட்டுமின்றி, சீனா, கிரேக்கம் ஆகிய நாடுகளிலும் இந்த விளையாட்டு இருந்துள்ளது. இந்தச் சூழலில் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், இங்கிருந்து மற்ற செல்வங்களை எடுத்துச் சென்றதுபோல் பாட்மிண்டன் விளையாட்டையும் தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்தியாவில் தங்கியிருந்த பிரிட்டன் ராணுவத்தினர், இந்த விளையாட்டைக் கற்க, பின்னர் அவர்கள் மூலமாக அது பிரிட்டனில் பரவியுள்ளது. பின்னர் அங்கிருந்து ஐரோப்பா கண்டம் முழுமைக்கும் பாட்மிண்டன் விளையாட்டு பரவியுள்ளது. ஆரம்ப கட்டத்தில் பாட்மிண்டன் விளையாட்டுக்கென்று முறையான விதிகள் ஏதும் இல்லை. இந்த சூழலில் 1867-ம் ஆண்டு, இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்கள் பாட்மிண்டன் விளையாட்டுக்கென்று சில விதிகளை உருவாக்கி உள்ளனர். பாட்மிண்டன் விளையாட்டுக்கென்று முதலாவது கிளப், 1877-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ‘தி பாத் பாட்மிண்டன் கிளப்’ என்று இதற்கு பெயரிடப்பட்டது. இந்தியாவில் 1899-ம் ஆண்டு ‘இந்திய பாட்மிண்டன் கூட்டமைப்பு’ தொடங்கப்பட்டது.

1934-ம் ஆண்டு, சர்வதேச பாட்மிண்டன் கூட்டமைப்பு தொடங்கிய பிறகு, சர்வதேச அளவிலான பாட்மிண்டன் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த கூட்டமைப்பில் 1936-ம் ஆண்டில் இந்தியா இணைந்தது. 1992-ம் ஆண்டில் பார்சிலோனா நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், பாட்மிண்டன் விளையாட்டு முதன்முதலாக சேர்க்கப்பட்டது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் தீபங்கர் பட்டாச்சார்யா, விமல் குமார், மதுமிதா பிஸ்ட் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x