Published : 22 Jan 2021 03:17 AM
Last Updated : 22 Jan 2021 03:17 AM

சீரம் தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு கரோனா தடுப்பு மருந்து தயாரிப்புக்கு பாதிப்பில்லை என தகவல்

புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் தொழிற்சாலையில் நேற்று மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். எனினும், இதனால் கரோனா தடுப்பு மருந்து உற்பத்தி பாதிக்கப்படாது என தெரியவந்துள்ளது.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனிகாநிறுவனம் இணைந்து கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பூசியை மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு என்ற கரோனா தடுப்பூசி நாடு முழுவதும் சுகாதார பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

100 ஏக்கர் பரப்பளவு

புனேவின் மன்ஜிரி பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சீரம் இன்ஸ்டிடியூட் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு கட்டிடத்தின் 4-வது, 5-வது தளத்தில் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

புனே மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன. கொழுந்துவிட்டு எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் அணைக்க போராடினர். தீப் பிடித்த கட்டிடத்தில் சிக்கிக் கொண்டிருந்த 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பல மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. எனினும் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இதுகுறித்து புனே போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா கூறும்போது, "வெல்டிங் பணியின்போது தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

சீரம் நிறுவனம் விளக்கம்

சீரம் இன்ஸ்டிடியூட் மூத்த அதிகாரிகள் கூறும்போது, "எங்களது வளாகத்தில் புதிதாக 8 கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் பிசிஜி தடுப்பூசி தயாரிக்கும் ஆலை பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஆலைப் பகுதி, சேமிப்பு கிடங்குகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை" என்றனர்.

சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அடார் பூனவாலா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "எங்களது ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா தடுப்பூசி உற்பத்திக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது" என்று கூறியுள்ளார்.

170 நாடுகளுக்கு ஏற்றுமதி

உலகின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனங்களில் சீரம் இன்ஸ்டிடியூட்டும் ஒன்றாகும். இங்கு தயாரிக்கப்படும் மருந்துகள் உலகம் முழுவதும் 170 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. போலியோ தடுப்பு மருந்து, எச்ஐவி, பிசிஜி உள்ளிட்ட பல்வேறு வகையான தடுப்பு மருந்துகளை சீரம் உற்பத்தி செய்து வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 60 சதவீத குழந்தைகளுக்கு சீரம்இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் தடுப்புமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

தீ விபத்தில் சந்தேகம்

பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டகுறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டிருக்கிது. அந்த வரிசையில் இந்தியாவும் அண்மையில் இணைந்தது.

இந்திய கரோனா தடுப்பூசிகளுக்கு எதிராக சர்வதேச அளவில் சதி நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக உயர்நிலை விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க சீரம் நிறுவனத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அங்கு தீ விபத்து ஏற்பட்டிருப்பது சந்தேகத்தை அதிகரிக்க செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x