Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜுக்கு செயற்கை சுவாசம் தமிழகத்தில் புதிதாக 549 பேருக்கு தொற்று உறுதியானது

சென்னையில் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உணவுத் துறை அமைச்சர்ஆர்.காமராஜுக்கு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கடந்த 5-ம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை, மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பூரணகுணமடையாத நிலையில் பொங்கலுக்கு முன்னதாக வீட்டுக்குச் சென்ற அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் அவர் மியாட்மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார்.

இதற்கிடையே, உறவினர்கள் விருப்பத்தின்பேரின் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மதியம் அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், அன்று இரவு அங்கிருந்து எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நுரையீரல் கடுமையாக பாதிப்பு

எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் உதவி இயக்குநர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை அரசு பொது மருத்துவமனையில் இருந்து அமைச்சர் ஆர்.காமராஜ் செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டார். நெஞ்சக சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டதில், கரோனா தொற்றால் அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் சீராகி வருகின்றன. மருத்துவ ரீதியாக அவரதுஉடல் நிலை மேம்பட்டு வருகிறது. செயற்கை சுவாச உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக 549 பேர் பாதிப்பு

இதனிடையே தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று புதிதாக549 பேர் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 32,415 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 8 லட்சத்து 14,811 பேர் குணமடைந்துள்ளனர். 5,314 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று முதியவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,290 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,076 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 29,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1 கோடியே 53 லட்சத்து 91,518 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x