Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

காவிரி - குண்டாறு இணைப்பு, கல்லணை புனரமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் பிரதமர் மோடிக்கு முதல்வர் அழைப்பு புயல், மழை பாதிப்புக்கான நிவாரணத்துக்கு நிதியுதவியும் கோரினார்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசினார். அப்போது, காவிரி - குண்டாறு இணைப்பு, கல்லணை புனரமைப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட வருமாறு அழைப்பு விடுத்த முதல்வர், புயல் மற்றும் மழை பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க நிதியுதவியும் கோரினார்.

முதல்வர் பழனிசாமி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அவருடன் அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலர் கே.சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர். நேற்று முன்தினம் மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். அப்போது நிவர், புரெவி புயல் நிவாரணம் குறித்தும், தமிழக அரசியல், தேர்தல் கூட்டணி, சசிகலா விடுதலை தொடர்பாக பேசியதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் பழனிசாமி சந்தித்து 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது:

காவிரி - குண்டாறு இணைப்பு, கல்லணை புனரமைப்பு மற்றும் பவானி ஆற்றை நவீனப்படுத்தும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட வருமாறும், சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரை யிலான மெட்ரோ ரயில் சேவை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரிவாயு திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கவும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அவரும் வருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத் துக்கு ஒப்புதல் அளிக்கவும், காவிரி - குண்டாறு இணைப்பு, நடந்தாய் வாழி காவிரி திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளேன். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் நிலை 2, நிவர், புரெவி புயல்கள் மற்றும் ஜனவரி யில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங் கவும் நிதியுதவி அளிக்குமாறு கேட்டுள் ளேன். கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை கிலோ வுக்கு ரூ.99.60-ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்த வேண்டும்.

தமிழகத்தின் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதியாதாரம் பெறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் மணலூரில் மருந்துகள் பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவக் கருவிகள் பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு நிதியுதவி, தமிழகத்தில் 2 மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கவும் சென்னை, சேலம், ஒசூர், கோவை, திருச்சி ஆகிய இடங் களில் ஏற்கெனவே அறிவித்தபடி ராணுவ தளவாட தொழில் வழித்தடம் அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண் டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன். இந்த கோரிக்கைகளை பரிசீலித்து நட வடிக்கை எடுப்பதாக பிரதமர் தெரிவித்து உள்ளார்.

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை எங்கள் அரசு நிறைவேற்றி வருகிறது. கல்விக்கு முன்னுரிமை அளித்து அதிக அளவில் நிதி ஒதுக்கியுள்ளோம். நாட்டிலேயே உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 49 சதவீதமாக உள்ளது. மருத் துவத் துறையிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. எங்கள் அரசு எடுத்த நடவடிக்கைகளால் நாட்டிலேயே தமிழகத் தில்தான் கரோனா பரவல் குறைந்துள்ளது.

தமிழகத்தில் நீர் மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்த குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. ஏரி, குளங்கள், குட்டைகள் ஊரணிகள் தூர்வாரிய நிலையில், பருவமழையும் நன்றாக பெய்ததால், அனைத்திலும் நீர் நிரம்பியுள்ளது. நிவர், புரெவி புயல்களால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கணக்கிட்டு, முதல்கட்டமாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மற்றும் மானாவாரி பயிர்கள் சேதமடைந்துள்ளதால், அவற்றை கணக் கெடுக்க அறிவுறுத்தியுள்ளேன். இது குறித்து பிரதமரிடம் தெரிவித்து, உடனடியாக நிவாரணம் வழங்க நிதியுதவி அளிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளேன்.

கடந்த ஆண்டு நீட் தேர்வு மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் 6 பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்தது. ஆனால், தமிழக அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளித்ததால், இந்த ஆண்டு 313 மாணவர்கள் மருத்துவம், 92 மணவர்கள் பல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டு 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கும்போது 450 பேர் மருத்துவம், 150 பேர் பல் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும். அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் செலவையும் அரசே ஏற்றுள்ளது. அமித் ஷாவிடம் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. அரசியல் பேசுவதற்கு இது தகுந்த நேரம் இல்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது.

இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

சசிகலா அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை

சசிகலா வெளியில் வந்தால் அதிமுகவுடன் இணைய வாய்ப்புள்ளதா என்று முதல்வர் பழனிசாமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

அதிமுகவில் சசிகலா இணைய வாய்ப்பே இல்லை. அவர் அதிமுக கட்சியிலேயே கிடையாது. சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க பாஜக நினைப்பதாக கூறப்படுகிறதே என கேட்கிறீர்கள். நாங்கள் சந்தித்தது தமிழக வளர்ச்சி மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தேவையான நிதி ஒதுக்க கோருவதற்காகத்தான். சசிகலா இணைவதற்கு நூறு சதவீதம் வாய்ப்பு கிடையாது. அதிமுக பொதுக்குழுவில் தெளிவாக முடிவெடுக்கப்பட்டு, அதன்படி கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. ஏற்கெனவே அங்கிருந்தவர்களில் பலர் அதிமுகவுக்கு வந்துவிட்டனர். ஒருசிலர்தான் அவருடன் இருக்கின்றனர்.

இவ்வாறு முதல்வர் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x