Published : 16 Jan 2021 03:15 AM
Last Updated : 16 Jan 2021 03:15 AM

காணும் பொங்கலான இன்று பிச்சாவரம், செஞ்சி கோட்டை, கடற்கரைகளில் மக்களுக்கு தடை மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

காணும் பொங்கலான இன்று கடற்கரைகளுக்கு பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ள தாக கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கரோனா தொற்றை தடுப்பதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு, தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக, கடலூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

தமிழ்நாட்டின் அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கலான இன்று ஒருநாள் மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசால் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது.

மேற்கண்ட தமிழ்நாடு அரசு உத்தரவின் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம் சுற்றுலா தலம், தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை, தாழங்குடா கடற்கரை, சாமியார்பேட்டை கடற்கரை ஆகிய முக்கிய கடற்கரை பகுதிகளிலும் மற்றும் இதரகடற்கரை பகுதிகளில் இன்று மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

ஆற்றுத்திருவிழா

இதே போல் பெண்ணையாறு, கெடிலம் ஆறு, மணிமுத்தாறு, வெள்ளாறு, பரவனாறு, உப்பனாறு, வல்லம்படுகை கொள்ளிடம் ஆறு முதலான ஆறுகளின் கரைகளிலும் காணும் பொங்கலான இன்றும், ஆற்றுத்திருவிழாவான நாளை மறுதினமும் பொதுமக்கள் அதிகளவில் கூட்டம் கூட வாய்ப்புள்ளதால் அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும், ஆற்றுத்திருவிழா நாளில் தீர்த்தவாரி உற்சவத்துக்காக சாமிகள் அலங்கரிக்கப்பட்டு ஆறு மற்றும் பொதுவெளிக்கு கொண்டு வருவதை தவிர்த்து கோயில்களிலேயே நடத்திக் கொள்ள கேட்டுக் கொள் ளப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.

செஞ்சிகோட்டையை பார்வையிட தடை

செஞ்சி கோட்டைக்கு நேற்று தொடங்கி நாளை வரை சுற்றுலா பயணிகள் வரவும், பார்வையிடவும் தடை செய்து விழுப்புரம் ஆட்சியர்அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து செஞ்சி கோட்டைக்கு நாளைவரை சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என இந்திய தொல்லியல் துறை முதுநிலை பராமரிப்பு அலுவலர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கேட்டு கொண்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர் வட்டம் மணலூர்பேட்டை தென்பெண் ணையாறு, சின்னசேலம் வட்டம் கச்சிராயபாளையம் கோமுகி ஆறு மற்றும் இதர இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 5-ம் நாள் ஆற்றுத்திருவிழாவில் அதிகளவில் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டும் நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஆற்றுத் திருவிழாவின் போது சுமார் 50,000-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மணலூர்பேட்டை, தென்பெண்ணை யாறு, கச்சிராயபாளையம் கோமுகி ஆறு மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் ஆற்றுத் திருவிழாக்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா தடைவிதித்து ஆணையிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x