Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களில் எம்.பி ஆய்வு

தொடர் மழை காரணமாக, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட நெல் வயல்களில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் நேற்று ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பருவம் தவறிய மழையால் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலை யில், பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் புக்கரம்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், ஆட்சியர் ம.கோவிந்தராவ் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

அப்போது, தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட பயிர்களை எடுத்துக் காண்பித்த விவசாயிகளிடம், பயிர் பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வைத்திலிங்கம் தெரிவித்தார். மேலும், எந்த ஒரு பாதிப்பும் விடுபடாமல், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவார ணம் கிடைக்கும் வகையில் கணக் கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, சூரப்பள்ளம், ஒரத்தநாடு வட்டம் புதூர், பாப்பாநாடு, நெம்மேலி வடக்கு, அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் திருப்புவனம், கோவில்பத்து உள்ளிட்ட இடங்களிலும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த அவர், விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, எம்எல்ஏக்கள் சி.வி.சேகர், மா.கோவிந்தராசு, பட்டுக்கோட்டை உதவி ஆட்சியர் பாலசந்திரன், ஒருங்கிணைந்த மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் காந்தி, வேளாண் துறை இணை இயக்குநர் ஏ.ஜஸ்டின் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x