Published : 23 Dec 2020 03:16 AM
Last Updated : 23 Dec 2020 03:16 AM

சிதம்பரம் ஆருத்ரா விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி

கடலூர்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தேரோட்டம் மற்றும் தரிசன விழாவுக்கு கரோனா ஊரடங்கு இருப்பதை காரணம் காட்டி, மாவட்ட நிர்வாகம் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதித்தது.

இைதத்தொடர்ந்து, சென்னையில் நேற்று முன்தினம் முதல்வர் பழனிசாமியை, சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் பாண்டியன் தலைமையில் கோயில் பொது தீட்சிதர்கள் பாஸ்கர தீட்சிதர், நடராஜ மூர்த்தி தீட்சிதர், நவமணி தீட்சிதர் ஆகியோர் நேரில் சந்தித்து முறையிட்டனர். மேலும், முதல்வருக்கு கோயில் திருவிழா பத்திரிகையை அளித்தனர். அப்போது காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முருமாறனும் உடனிருந்தார். தீட்சிதர்களிடம் முதல்வர் பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் விவரம் வருமாறு: சிதம்பரம் நகரில் நடைபெறும் மார்கழி ஆருத்ரா தரிசன மகோத்சவத்தினை பக்தர்களின் நம்பிக்கை பாதிக்கப்படாத வகையில், அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திட மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

ஆருத்ரா தரிசன மகோத்சவத்தின்போது 29-ம் தேதி நடைபெறும்  நடராஜமூர்த்தி தேரோட்டத்தில் 1,000 நபர்கள்,  சிவகாமசுந்தரி அம்மன் தேரோட்டத்தை நடத்த 400 நபர்கள்,  விநாயகர் தேரோட்டத்தை நடத்த 200 நபர்கள்,  சுப்ரமணியர் தேரோட்டத்தை நடத்த 200 நபர்கள் மற்றும்  சண்டிகேஸ்வரர் தேரோட்டத்தை நடத்த 200 பேருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 30-ம் தேதி கோயில் நடைபெறும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் அரசு தெரிவித்துள்ள கரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி, கோயில் வளாகத்தினுள் ஒரே சமயத்தில் 200 நபர்களுக்கு மிகாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விழாவில் கலந்துகொள்ள வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. விழாவில் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும் பங்கேற்க வேண்டும்” என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x