Published : 22 Dec 2020 03:15 AM
Last Updated : 22 Dec 2020 03:15 AM

இந்தியா - ஜப்பான் இடையே 6-வது ஆண்டு கருத்தரங்கு மக்கள் நலனை அடிப்படையாக கொண்டு வளர்ச்சி திட்டங்கள் இருக்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

வளர்ச்சித் திட்டங்கள் அனைத்துமே மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஆறாவது ஆண்டு இந்தியா - ஜப்பான் இடையிலான கருத்தரங்கில் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது:

கடந்த காலங்களில் கருத்து வேற்றுமைதான் மனித சமூகத்தில் நிலவியது. ஆனால் வளர்ச்சிக்கு தேவை ஒற்றுமைதான். ஏகாதிபத்தியத்தில் இருந்து உலகப் போர் வரையிலான நிகழ்வுகள், மனித சமூகத்திடையே நிலவிய கருத்து வேற்றுமைகளைதான் உணர்த்துகின்றன. அடுத்தபடியாக ஆயுதப் போட்டியில் தொடங்கி தற்போது வான்வெளி போட்டி தொடங்கியுள்ளது. இது தொடர்பாக பேச்சு நடத்துகிறோம். ஆனால் அது ஒருவரை மற்றவர் பிடித்து இழுத்து விடும் வகையில்தான் இருக்கிறது. ஆனால் இனிமேல் நாம் ஒற்றுமையாக இருந்து வளர்ச்சியை எட்டுவோம்.

சர்வதேச வளர்ச்சி பற்றி ஒரு சில நாடுகள் மட்டுமே பேசுவதால் பயன் கிடைக்காது. இதுதொடர்பாக பேச வேண்டிய விஷயம் மிகப் பெரியது. அதில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் எல்லையற்றவை. இந்த முயற்சியில் அனைத்து நாடுகளும் பங்கேற்க வேண்டும். மனித சமூகத்தின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

மனித நேயம் கட்டாயம்

மேலும் நல்லிணக்கம் சமூகத்திடையே மிகவும் அவசியம். அனைத்து வகையான கொள்கை முடிவுகளிலும் மனித நேயம் அடிப்படையானதாக கட்டாயம் இருக்க வேண்டும். இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை நாம் மேற்கொள்வது சமூகத்துக்கும் நமக்கும் மிகுந்த பயனளிப்பதாக இருக்கும்.

புத்தர் நூலகம்

கவுதம புத்தரின் இலக்கியம் மற்றும் அவரது வேத இலக்கியங்கள் அடங்கிய பிரத்யேக நூலகம் ஒன்று உருவாக்கப்படும். இத்தகைய நூலகத்தை இந்தியாவில் உருவாக்குவதை பெருமையாகக் கருதுகிறோம். அதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும். இந்த நூலகத்தில் பிற நாடுகளில் இருந்து பெறப்பட்ட புத்தரின் இலக்கியங்கள் அனைத்தும் டிஜிட்டல் பதிவுகளாக இடம்பெறும். இது புத்த பிக்குகள் மற்றும் புத்தர் குறித்த ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் அமையும்.

இந்த நூலகம் இலக்கிய நூல்களை மட்டுமே உள்ளடக்கியதாக இருக்காது. ஆராய்ச்சி மேற்கொள்ள உதவுவதோடு மனித சமூகத்தை இணைக்கும் பாலமாக (சாம்வாட்) திகழும். மனிதனையும், இயற்கையையும் இணைப்பதாக இது விளங்கும்.

தற்போது எதிர்கொள்ளும் சவால்களுக்கு உலகம் எவ்விதம் தீர்வு காண வேண்டும் என புத்தரின் அருள் உரைகள் மூலமாக கூறப்பட்டிருப்பது ஆராயப்படும். புத்தரின் போதனைகள் அனைத்துமே வலிமையானதாகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகவும் இருக்கின்றன.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x