Published : 20 Dec 2020 03:13 AM
Last Updated : 20 Dec 2020 03:13 AM

2-வது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு சுருண்டது அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணி தோல்வி

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்று வந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்களும், ஆஸ்திரேலியா 191 ரன்களும் எடுத்தன. 53 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன் எடுத்தது.

62 ரன்கள் முன்னிலையுடன் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி ஜோஸ் ஹேசல்வுட், பாட் கம்மின்ஸ் ஆகியோரது வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 21.2 ஓவர்களில் கொத்து கொத்தாக விக்கெட்களை தாரை வார்த்து வெறும் 36 ரன்களுக்கு சுருண்டது. எந்த பேட்ஸ்மேனும் இரட்டைஇலக்க ரன்னை எட்டவில்லை. ஜஸ்பிரீத் பும்ரா 0, சேதேஷ்வர் புஜாரா 0, மயங்க் அகர்வால் 9, அஜிங்க்ய ரஹானே 0, கேப்டன் விராட் கோலி 4, ரித்திமான் சாஹா 4, ரவிச்சந்திரன் அஸ்வின் 0, ஹனுமா விகாரி 8 ரன்களில் நடையை கட்டினர்.

மொமகது ஷமி பாட் கம்மின்ஸ் பந்தில் காயம் அடைந்ததால்ரிட்டயர்டு ஆனார். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோஸ்ஹேசல்வுட் 5 ஓவர்களை வீசி 3 மெய்டன்களுடன் 8 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை வேட்டையாடினார். பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

36 ரன்களில் சுருண்டதன் மூலம்டெஸ்ட் போட்டிகளில் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்த 4-வது அணி என்றமோசமான சாதனையை படைத்தது இந்திய அணி. இந்த வகையில் நியூஸிலாந்து 26, தென் ஆப்பிரிக்கா 30, ஆஸ்திரேலியா 36 ரன்களில் ஆட்டமிழந்துள்ளன. இதற்கு முன்னர் 1974-ல் லார்ட்ஸ் மைதானத்தில்இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 42 ரன்களில் சுருண்டிருந்தது.

90 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 21 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.எட்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் வரும்26-ம் தேதி மெல்பர்னில்தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x