Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை திமுக கூட்டணியின் போராட்டம் தொடரும் சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்வரை போராட்டம் தொடரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. கரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளிக்க மறுத்தது. ஆனாலும், தடையை மீறி திட்டமிட்டபடி நேற்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த போராட்டத் தில் திமுக மகளிர் அணி செய லாளர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள்கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து ஸ்டாலின் பேசியதாவது:

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 23 நாட்களாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டங்களை நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

கரோனா நெருக்கடியில் நாடுஇருக்கும்போது நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக வேளாண் சட்டங்கள், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை, புதிய மின்சார திருத்தச் சட்டம் ஆகியவற்றை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.

மக்களைப் பற்றி கவலைப் படாமல் கார்ப்பரேட் கம்பெனி களுக்கு துணை நிற்கும் வகையில்அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கிக் கொண் டிருக்கிறது.

போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை என்று ஒரு நாடகத்தை மத்திய அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. போராடும் விவசாயிகளை மத்திய அரசுஅலட்சியப்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாது, போராடும்விவசாயிகளை தேசவிரோதிகள், அந்நிய கைக்கூலிகள், மாவோயிஸ்ட்கள், தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்துகிறார்கள்.

வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டுவருவதால் எவ்வித பயனும் இல்லை. அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை. மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் வரை நமது போராட்டங்கள் தொடரும். அதுகுறித்து முடிவு செய்து, பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

உண்ணாவிரதப் போராட்டத்தின்போது டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு சிரோமணி அகாலி தளம் கட்சியின் தமிழக தலைவர் ஹர்பன்ஸ் சிங் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் நேரில் நன்றி தெரிவித்தனர்.

1,900 பேர் மீது வழக்கு பதிவு

சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட 32 முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் என 300 பெண்கள் உட்பட மொத்தம் 1,900 பேர் மீது, அனுமதி இன்றி உண்ணாவிரதம் இருத்தல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x