Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM

கோவை மாநகரில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்ற கருத்து கேட்பு

கோவை மாநகராட்சியின் பழைய 72 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், இணைக்கப்பட்ட பகுதிகளில் முதல்கட்டமாக குறிச்சி, குனியமுத்தூரிலும் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் நேற்று கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதிகளுக்கான கூட்டம் துடியலூரில் உள்ள திருமண மண்டபத்திலும், வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளுக்கு கல்வீரம்பாளையத்திலும், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், பீளமேடு பகுதிகளுக்கு மசக்காளிபாளையத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இவற்றில், மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் மற்றும் மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டங்களில் பேசிய பொதுமக்கள், ‘‘பாதாள சாக்கடைப் பணியை விரைவாக முடிக்க வேண்டும். குறிப்பிட்ட பகுதியில் பணியை முடித்த பின்னரே, அடுத்த பகுதியில் பணியை மேற்கொள்ள வேண்டும். திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடுவதில் தாமதம் கூடாது. போக்குவரத்துக்கு நெரிசலை ஏற்படுத்தும் வகையில் குழாய்களை போட்டுவைக்கக்கூடாது’’ என்று வலியுறுத்தினர்.

மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்பாண்டியன் பேசும்போது, ‘‘கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு, பிரதான கழிவுநீர் உந்து நிலையம் மூலம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சங்கனூர் பள்ளம் ஓடை வழியாக நொய்யல் ஆற்றில் விடப்படும். வடவள்ளி, வீரகேரளத்தில் சேகரமாகும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, முத்தண்ணன் குளம் கடைவழி ஓடை வாயிலாக நொய்யல் ஆற்றில் விடப்படும். கணபதி, கணபதி மாநகர், தண்ணீர்பந்ததல், ஒண்டிப்புதூர் பகுதிகளில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த இடங்களில் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு, ஒண்டிப்புதூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x