Published : 01 Dec 2020 03:15 AM
Last Updated : 01 Dec 2020 03:15 AM

கனிமவள கொள்ளையைத் தடுக்க அனைத்து மாவட்ட எல்லைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தல்

சென்னை

கனிமவளக் கொள்ளையை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது அவசியம் என உயர் நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சட்டவிரோத கிரானைட் முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி தமிழக தலைமைச் செயலரின் கடிதத்தை தாக்கல் செய்தார். அதில், ‘‘தமிழகத்தில் தருமபுரி, சிவகங்கை, தஞ்சாவூர்,பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மாவட்ட எல்லைகளில் 151 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அரியலூர்,கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மாவட்ட, மாநில எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள எல்காட் நிறுவனத்துக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான இடங்களை கண்டறிந்து தெரிவிக்கும்படி அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாமக்கல்,திருப்பூர், நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியத்தில் நிதிப்பற்றாக்குறையாக இருப்பதால் 2 மாதம் அவகாசம் வழங்க வேண்டும்’’ என கோரப்பட்டு இருந்தது.

அந்த அறிக்கையைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கனிமவள கொள்ளையைத் தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது அவசியமான ஒன்று. இதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை. அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும். அந்தந்தமாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். 4 மாவட்டங்களில் கனிம வள நிதியத்தில் நிதியில்லை என்றால் வேறு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில்இருந்து செலவு செய்து கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும். இந்த கேமராக்கள் 24 மணி நேரமும் பழுதடையாமல் இயங்கும் வகையில் அதை உறுதிபடுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிச.11-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x