Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கமத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

புதுடெல்லி

கரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், டிசம்பர் மாதத்துக்கான வழிகாட்டு நெறிகளை நேற்றுவெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. சில மாநிலங்களில் மட்டும் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. பண்டிகை காலம், குளிர்காலத்தில் வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாநில அரசுகளும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

வைரஸ் தொற்று அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளை தவிர வேறு எந்த பணிகளையும் அனுமதிக்கக்கூடாது. கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடு, வீடாக சோதனை நடத்த வேண்டும்.

பொது இடங்களில் அனைத்து தரப்பு மக்களும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கலாம். பொது இடங்கள், அலுவலகங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்த வெளிநாட்டு விமான சேவைகள் மட்டுமே இயக்கப்படும். திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். நீச்சல் குளங்களில், நீச்சல் வீரர்கள் மட்டுமே பயிற்சி பெறலாம்.

சமூக, மதம், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தும் அரங்குகளில் 50 சதவீத பேரை மட்டுமேஅனுமதிக்க வேண்டும். இந்தஎண்ணிக்கை 200 பேரை தாண்டக்கூடாது. சூழ்நிலைக்கு ஏற்ப மாநில அரசுகள் பார்வையாளர்களின் எண்ணிக்கையை 100 ஆகக் குறைத்து கொள்ளலாம். பொது இடங்களில் அதிக அளவில் கூட்டம்கூடுவதை தடுக்க வேண்டும்.

பத்து சதவீதத்துக்கும் அதிகமாக கரோனா தொற்றுள்ள நகரங்களில் அலுவலக நேரத்தை மாநில அரசுகள் மாற்றி அமைக்கலாம். மாவட்டங்கள் மற்றும்மாநிலங்களுக்கு இடையிலான பயணிகள், சரக்கு போக்குவரத்துக்கு எவ்வித தடையும் கிடையாது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீடுகளில் தங்கியிருப்பது நல்லது. ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பயன்படுத்துங்கள். இந்த வழிகாட்டு நெறிகள் டிசம்பர் 1 முதல் 31 வரை அமலில் இருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

86.42 லட்சம் பேர் குணம்

நாடு முழுவதும் நேற்று 44,376 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 92,22,216 ஆக உயர்ந்துள்ளது. இதில் 86,42,771 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 37,816பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

மருத்துவமனைகளில் 4,44,746பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 481 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,34,699 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 5,439 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 84,238 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 46,683 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் புதிதாக 1,870 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 24,631 பேர் சிகிச்சையில் உள்ளனர். 11,695 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் புதிதாக 1,085 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x