Published : 23 Nov 2020 03:11 AM
Last Updated : 23 Nov 2020 03:11 AM

கேரளாவில் புதிய சட்டம் அமல்; சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் 3 ஆண்டு சிறை; எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

திருவனந்தபுரம்

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்தை கேரள அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு செய்தியாளர் சங்கங்கள், எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கேரளாவில் மார்க்சிஸ்ட் தலை மையில் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 18-ம் தேதி முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில், சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் வகையில், கேரள புதிய போலீஸ் (திருத்தம்) சட்டத் துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கினார்.

‘சமூக வலைதளங்களில் மிரட் டல், திட்டுதல், அவமானப்படுத்து வது, அவதூறு பரப்புவது உள் ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது சிறை, அபராதம் இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்’ என்று புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தின் போது 5 ஆண்டுகள் சிறை தண் டனை விதிக்க பரிந்துரை செய்யப் பட்டிருந்தது. அதன்பிறகு சிறை தண்டனை 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு, அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

செய்தியாளர் சங்கம் எதிர்ப்பு

புதிய சட்டம், கருத்து சுதந் திரத்துக்கு அச்சுறுத்தலாக இருப் பதாக ஊடகங்களும் எதிர்க் கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளன.

கேரள செய்தியாளர் சங்கத்தின் தலைவர் (கே.யு.டபிள்யூ.ஜே) கே.பி.ரெஜி கூறும்போது, ‘‘சைபர் குற்றங்களை தடுப்பதாகக் கூறி ஒட்டுமொத்த ஊடகத்தையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர கேரள அரசு திட்டமிட்டிருக்கிறது. புதிய சட்டத்தில் ‘மக்கள் ஊடகம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டிருப்பதால் அனைத்து ஊட கங்களும் புதிய சட்ட வரம்பின்கீழ் வந்துவிடும். புதிய சட்டத்துக்கு எங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளோம். இது தொடர் பாக ஆளுநரிடம் மனு அளித் துள்ளோம்’’ என்றார்.

காங்கிரஸ், பாஜக கண்டனம்

காங்கிரஸ் மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னி தாலா கூறும்போது, ‘‘பெண் களுக்கு எதிரான அவதூறை தடுப்பதாக கூறிக் கொண்டு மக்களின் அடிப்படை உரிமையை கேரள அரசு பறித்திருக்கிறது. ஊட கங்களின் குரல்வளை நெரிக்கப் பட்டிருக்கிறது. தனிமனித கருத்து சுதந்திரத்துக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. புதிய சட்டத்தின் மூலம் யார் மீதும் போலீஸாரால் வழக்கு பதிவு செய்ய முடியும். சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது’’ என்று குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘கேரள அரசின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது’ என்று கூறியுள்ளார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் கூறும் போது, ‘‘மிகக் கொடூரமான சட்டத்தை இடதுசாரி அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் அரசின் சாயம் வெளுத்துவிட்டது’’ என்று கூறியுள்ளார்.

முதல்வர் விளக்கம்

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் நேற்று வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

சமூக வலைதள அவதூறுகள் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் இதழியல் என்ற பெயரில் தனிநபர் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தனிநபரின் கண்ணியத்தை காப்பாற்றவே புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. கேரள போலீஸ் (திருத்தம்) சட்டத்தால் ஊடக செயல்பாடுகளுக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் எந்தவித இடையூறும் ஏற்படாது. சட்டம் மற்றும் ஜனநாயக வரம்புக்கு உட்பட்டு கருத்துகளை பதிவு செய்யலாம். பத்திரிகை சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கரோனாவை மறைக்கவா?

கேரளாவில் தற்போது கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான உண்மைகளை முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மறைத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கரோனா வைரஸால் இதுவரை 2,049 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு புள்ளிவிவரம் கூறுகிறது. ஆனால் 3,356 பேர் உயிரிழந் திருப்பதாக பிபிசி செய்தி வெளி யிட்டுள்ளது.

கரோனா வைரஸ் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கேரள அரசுக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இதை தடுக்கவே புதிய சட்டம் அவசரமாக அமல்படுத்தப் பட்டுள்ளது என எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x