Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

ஓசூரில் போலி பில் தயாரித்து ரூ.141 கோடி மதிப்பு ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்டவர் கைது

ஓசூரில் ரூ.141 கோடி மதிப்பில் போலி பில் தயாரித்து ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்ட நபரை ஓசூர் வட்டார ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் போலி பில் தயாரித்து ஜிஎஸ்டி வரி மோசடி செய்யப்பட்டு வருவதாக கோவை மண்டல ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கோவை மண்டல கூடுதல் இயக்குநர் உத்தரவின் பேரில், ஓசூர் வட்டார ஜிஎஸ்டி அலுவலக அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் ஓசூரில் ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்டு வந்த நபரின் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தொடர்புடைய நபர், உறவினர்கள், நண்பர்களின் பான்எண்களை பயன்படுத்தி 5 தனித்தனி ஜிஎஸ்டி பதிவு எண்களைப் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

5 போலி ஜிஎஸ்டி எண்கள் மூலமாக ஓசூர் மற்றும் பெங்களூரு பகுதியில் உள்ள பல்வேறு உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு பொருட்களை வழங்காமல் போலியாக ரூ.141 கோடிக்கு ஜிஎஸ்டி பில் வழங்கியுள்ளதும், அதன் மூலமாக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போலி பில்களை பெற்ற நிறுவனங்கள் அதை பயன்படுத்தி வரி மோசடியில் ஈடுபட்டுள்ளதும் சோதனையில் தெரியவந்தது.

மேலும், இந்த சோதனையில் போலி நிறுவனங்களின் பெயரில் அச்சிடப்பட்ட பில் புத்தகங்கள், காசோலைப் புத்தகங்கள், போலி நிறுவனங்களின் பெயரிலான வங்கிக் கணக்குகளின் கையொப்பம் இடப்பட்ட காசோலைகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து போலி பில் தயாரித்து ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட நபரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலியாக ரூ.141 கோடிக்கு ஜிஎஸ்டி பில் வழங்கியுள்ளதும் அவற்றை பெற்ற நிறுவனங்கள் அதை பயன்படுத்தி வரி மோசடியில் ஈடுபட்டுள்ளதும் சோதனையில் தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x