Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

வெள்ளலூர் பேருந்து நிலைய பணி 2022 ஜனவரியில் நிறைவடையும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

கோவை

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்டப் பணி 2022 ஜனவரியில் நிறைவடையும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தின் ஒரு பகுதியில், 61.62 ஏக்கர் பரப்பளவில் ரூ.168 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. 300-க்கும் மேற்பட்ட பேருந்துகளை நிறுத்தும் வகையில் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஓராண்டுக்குள் பேருந்து நிலைய பணியை முடிக்க மாநகராட்சி நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா ஊரடங்கால் பணியில் பாதிப்பு ஏற்பட்டு, தற்போது மீண்டும் நடைபெற்றுவருகிறது.

தற்போது ‘டெர்மினல்’ எனப்படும் முதன்மையான வணிக வளாகங்களை உள்ளடக்கிய தரைத் தளம் மற்றும் முதல் தளம் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுவருகிறது. இப்பணியை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன், பணியை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘டெர்மினல் கட்டிடத்தின் தரைத் தளம் மற்றும் முதல் தளம் தலா 10,500 சதுர மீட்டரில் கட்டப்பட உள்ளது. தற்போது தரைத் தளத்துக்கு மேற்கூரைகள் அமைக்கும் பணி நடக்கிறது. மொத்த மதிப்பிட்டில் இதுவரை ரூ.25 கோடிக்கு பணிகள் நடந்துவருகின்றன. கூடுதல் ஆட்களை நியமித்து பணியை மேற்கொள்ளவும், சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் பணிகள் நிறைவடையும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x