Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM

ஏழைகளின் மருத்துவக் கனவை நனவாக்கிய அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆணைகளை வழங்கி முதல்வர் பழனிசாமி பெருமிதம்

ஏழைகளின் மருத்துவக் கனவை 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் தமிழக அரசு நனவாக்கியுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் முதலிடம் பிடித்த 18 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணைகளை முதல்வர் பழனிசாமி வழங்கிப் பேசினார். அவர் கூறியதாவது:

இந்த நாள் தமிழக வரலாற்றில் ஒரு பொன்னாள். அரசுப் பள்ளியில் படித்தேன் என்ற முறையில் எனக்கு மிகுந்த மனநிறைவை ஏற்படுத்திய நாள். ஜெயலலிதாவும், அவர் வழியில் இருக்கும் அரசும் கொள்கைவழியில் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. சட்டப் போராட்டத்தையும் தொடர்ந்து நடத்தி வருகிறது. எனினும், உச்ச நீதிமன்ற ஆணைப்படி நீட் தேர்வு நடந்துவருகிறது.

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வது மிகவும் குறைந்துவிட்டது.

தமிழகத்தில் பிளஸ்2 படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 8.41 லட்சம். அதில் 41 சதவீதம் பேர் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள். ஆனால், கடந்த ஆண்டு வெறும் 6 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு தேர்வானார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதை நான் உறுதியாகக் கொண்டிருந்தேன். இதற்கு எதிர்க்கட்சி குரல்கொடுக்கவில்லை.

பல தடைகளை தாண்டி 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்தை கொண்டுவந்து ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை அரசு நனவாக்கி உள்ளது.

அரசு, மாநகராட்சி, நகராட்சி,ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன், கள்ளர் சீர்மரபினர், வனத்துறை பள்ளி மாணவர்களின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் இதரசெலவினங்களால் சுமை ஏதும்ஏற்படாவண்ணம், இச்செலவினங்களை வழங்குவதற்காக கல்வி உதவித் தொகை திட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் மினி கிளினிக் தொடங்கி ஏழைமக்களுக்கு உரியசிகிச்சை கிடைக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

ஏழைகளுக்கும் மருத்துவக் கல்வி கிடைக்கக்கூடிய வசதியை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும். அவர்களுக்கு தேவையான உதவியை தொடர்ந்து செய்யும். கிராமம் முதல் நகரம் வரை ஏழைகள் நிறைந்த பகுதியில் தரமான மருத்துவ சிகிச்சைகிடைக்கச் செய்ய இப்படிப்பட்டமாணவச் செல்வங்களை அரசு ஊக்குவிக்கும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

மாணவர்கள் நன்றி

மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் முதல்வருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

மேகா: நீட் தேர்வில் நான் பெற்றமதிப்பெண்ணுக்கு மருத்துவப் படிப்பில் சேர முடியாது என்று வருத்தப்பட்டேன். தமிழக அரசுஅமல்படுத்திய 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் இப்போது எனக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஹரிகிருஷ்ணன்: அரசின் நீட் தேர்வு பயிற்சியில் படித்து, முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்றேன். அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துக் கல்வி படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. புத்தகங்கள், சைக்கிள், சீருடை, பஸ்பாஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை அரசு இலவசமாக வழங்கி என் படிப்புக்கு ஊக்கம் அளித்தது.

அர்ச்சனா: அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்தார். நாங்கள் எல்லாம் மருத்துவப் படிப்பை கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் இப்போது அது நிஜமாகி இருக்கிறது. முதல்வருக்கு நன்றி.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x