Published : 12 Nov 2020 03:13 AM
Last Updated : 12 Nov 2020 03:13 AM

ஐபிஎல் டி-20 தொடரில் 5-வது முறை மும்பை சாம்பியன் குச்சியை வைத்து மிரட்டும் கேப்டன் நான் இல்லை மனம் திறந்து பயிற்சியாளர், அணி வீரர்களை பாராட்டிய ரோஹித் சர்மா

கரோன வைரஸ் தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில், நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5-வது முறையாக மகுடம் சூடியது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.

சாம்பியன் பட்டம் பெற்ற பிறகு ரோஹித் சர்மா கூறியதாவது:

முழு சீசனும் எங்களுக்கு எப்படி சென்றது என்பதில் மிகவும் மகிழ்ச்சி. வெற்றி பெறுவதை ஒரு பழக்கமாக மாற்றுவது பற்றி ஆரம்பத்திலேயே கூறினோம். இதற்கு மேல் வீரர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? தொடரின் முதல் பந்தில் இருந்து இறுதி போட்டி வரை நாங்கள் சரியாக செயல்பட்டோம். திரைக்குப் பின்னால் பணியாற்றியவர்களின் உழைப்புக்கும் நன்றி.

சமநிலையுடன் கூடிய அணியைத் தேர்வு செய்து ஒரு அணியின் கேப்டனாக அமைதியுடன் இருக்க வேண்டும். யாரையும் குச்சியை வைத்து மிரட்டி வேலை வாங்கும் கேப்டனல்ல நான். நீங்கள் நம்பிக்கையை அளிப்பதன் மூலம் அதை செய்ய முடியும். ஹர்திக் பாண்டியா, கிருணல் பாண்டியா, பொலார்டின் பங்குகளை சுழற்சி முறையில் பயன்படுத்தினோம். பந்துவீச்சிலும் அப்படித்தான். ராகுல் சாஹருக்கு துரதிருஷ்டம், உத்திரீதியாக ஜெயந்த் யாதவ் தேவைப்பட்டார். ஒரு சிறந்த அணியாகத் தேர்வு செய்ய விளையாடும் லெவனை மாற்றும் போது அது யாரையும் பெரிய அளவில் வீழ்த்தி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

துரதிருஷ்டவசமாக இம்முறை மைதானத்தில் ரசிகர்கள் இருக்க முடியவில்லை. நாங்கள் வான்கடே மைதானத்தில் விளையாடுவதைத் தவறவிட்டோம். அடுத்த ஆண்டு நாங்கள் அங்கு திரும்பி வருவோம்.

இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.

தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும்போது, “ஐபிஎல் எப்போதும் உங்களை ஆச்சரியப்படுத்துகிறது, இது விளையாடுவதற்கு மிகவும் கடினமான தொடர்களில் ஒன்றாகும். அதன் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன், எங்களது வீரர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன், இறுதிப் போட்டிக்குள் நுழையும் வரை அவர்கள் விளையாடிய விதம் எளிதானது அல்ல. அடுத்த ஆண்டு கோப்பையை உயர்த்துவதை நாங்கள் காண்போம். பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எங்களுக்கு வழங்கிய சுதந்திரத்தின் அளவு மிகச்சிறந்ததாகும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x