Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM

மறைந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு குடும்பத்தினருக்கு நெருக்கடி அதிமுக மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மறைந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் குடும்பத்தினருக்கு அதிமுகவினர் நெருக்கடி கொடுப்பதாகவும், அவரதுஆதரவாளர்கள் கைது செய்யப்படுவதாகவும் திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வேளாண் துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு, கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது குடும்பத்தினருக்கு அதிமுகதரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. துரைக்கண்ணுவிடம் பெருமளவு பணம் கொடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அதைக் கேட்டு அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு,பணத்தை மீட்ட பிறகே மரணஅறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.

இந்தச் செய்திகள் குறித்து ஆளும் தரப்பில் இருந்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. நெருப்பு இல்லாமல் புகையாது என்பதால், இந்தச் செய்திகள் உண்மைதான் என்று மக்கள் நம்புகின்றனர்.

பத்திரிகையில் வந்த செய்திகளை மட்டும் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டலாமா என ஆளும் தரப்பினர் இதையும் மரணக்குழியில் போட்டு புதைக்க நினைக்கலாம். ஆனால், துரைக்கண்ணு தொகுதியில் காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளே சான்றாக இருக்கின்றன.

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவரான கும்பகோணம் மணஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவரும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவராக குற்றம் சாட்டப்பட்டவருமான முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து சாலை மறியல் செய்த மறைந்த அமைச்சரின் ஆதரவாளர்களான மேலும் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண பலத்தைக் கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற அதிமுகவின் பகல் கனவு சிதைந்து சிதறிவிடும் என்பதை 2021 சட்டப்பேரவைத் தேர்தல் நிரூபிக்கும். அதன்பிறகு வட்டியும் முதலுமாக, கூட்டு வட்டியையும் சேர்த்து சட்டம் தன் கடமையைச் செய்யும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x