Published : 08 Nov 2020 03:11 AM
Last Updated : 08 Nov 2020 03:11 AM

இஓஎஸ்-1 உட்பட 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் அபார வெற்றி கரோனா பரவலால் குறைவான விஞ்ஞானிகள், பணியாளர்களைக் கொண்டு இஸ்ரோ சாதனை

பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலம் புவி கண் காணிப்பு மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கான இஓஎஸ்-1 மற்றும் வணிக ரீதியாக 9 வெளி நாட்டு செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த ஆண் டில் இந்தியா செலுத்திய முதல் ராக்கெட் இதுவாகும்.

இந்திய எல்லைப் பகுதி மற்றும் அண்டை நாடுகளில் கண்காணிப்பு பணிகளுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) உதவியுடன் ராணுவ பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள்களை மத்திய அரசு விண்ணில் செலுத்தி வருகிறது.

அதன்படி, அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான தகவல்களை தரக்கூடிய ரேடார் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, 2009-ம் ஆண்டு ரிசாட்-2, 2012-ல் ரிசாட்-1, 2019-ல் ரிசாட்-2பி மற்றும் ரிசாட்-2பி ஆர்1ஆகிய செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் விண்ணில் நிலைநிறுத் தப்பட்டன.

அந்த வரிசையில் ரிசாட் செயற்கைக்கோள் வகையில் மேம்படுத்தப்பட்ட நவீன இஓஎஸ்-1 (ரிசாட்-2பி ஆர்2) செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலம் விண் ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், ராக்கெட் ஏவுதலுக்கான 26 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் தொடங்கியது. சதீஷ்தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் நேற்று மதியம் 3.11 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் தரையில் இருந்து புறப்பட்ட 15 நிமிடம் 20 விநாடியில் முதன்மை செயற்கைக்கோள் 575 கி.மீ. தொலைவில் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அடுத்த 5 நிமிட இடைவெளியில் வெளிநாடுகளுக்கு சொந்தமான 9 செயற்கைக்கோள்களும் அவற்றுக்கான சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன. இஓஎஸ்-1 செயற்கைக்கோள் 630 கிலோ எடை கொண்டது. இதன்ஆயுட்காலம் 5 ஆண்டுகள். இது முழுவதும் புவி கண் காணிப்பு மற்றும் ராணுவ பாதுகாப்புக்கு உதவியாக உளவு பணிகளை மேற் கொள்ளும்.

இந்த ஆண்டில் இந்தியா தரப்பில் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் ராக்கெட் இதுவாகும். மோசமான வானிலை காரணமாக பிஎஸ்எல்வி ராக்கெட் திட்டமிடப்பட்டதைவிட 9 நிமிடம் தாமதமாக ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:

இஓஎஸ் செயற்கைக்கோளில் உள்ள எக்ஸ்பேன்ட் சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார், அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் அதிக திறன் கொண்ட படங்களை துல்லியமாக எடுக்கும். இரவு, பகல் மட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் புவியை துல்லியமாக படம் பிடித்து அனுப்பும்.

இத்தகைய ரேடார் செயற்கைக்கோள்கள் உதவியால் நாட்டின் எல்லைப் பகுதிகளை துல்லியமாக கண்காணிக்க முடியும். தெற்காசிய கடல் பகுதிகளில் கப்பல்கள், போர் விமானங்கள் ஊடுருவல் மற்றும் பயங்கரவாத முகாம்களை கண்டறிந்து அழிக்க பெரிதும் உதவிபுரியும். தொடர்ந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மேலும் 4 ரேடார் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இதனால் நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுப்பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேசியதாவது:

கரோனா பரவல் காரணமாக நாட்டில் அனைத்து துறைசார்ந்த பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், சுகாதாரப் பேரிடர் சவால்களை தகர்த்து சாதனைபயணத்தை இஸ்ரோ தொடர்ந்து வருகிறது.

விண்வெளி ஆராய்ச்சி பணிகளை பொறுத்தவரை மற்ற துறைகளைபோல வீட்டிலிருந்தபடி பணிபுரிய முடியாது. எனினும், விண்வெளி திட்டங்களுக்கு தடை ஏற்படாமல் இருப்பதில் இஸ்ரோ உறுதியாக இருந்தது. அதேநேரம் யாருக்கும் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தோம்.

ராக்கெட் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகள் அனைத்தும் விஞ்ஞானிகள், பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிந் தாக வேண்டும். எனவே, உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் குறைந்த எண்ணிக்கை யிலான விஞ்ஞானிகள், பணியாளர்களைக் கொண்டு பிஎஸ்எல்வி சி-49 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளோம்.

இதையடுத்து பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-1 செயற்கைக்கோளும், எஸ்எஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் களில் இஓஎஸ்-1, இஓஎஸ்-2 செயற்கைக் கோள்களும் அடுத்தடுத்து விண்ணில் செலுத் தப்பட உள்ளன. விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து இஸ்ரோ தன் பங்களிப்பை வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

முக்கிய அம்சங்கள்

l பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலம் வணிகரீதியாக அமெரிக்காவின் 4 லெமூர் செயற் கைக்கோள்கள், லக்சம்பர்க் நாட்டின் கிளியோஸ் ஸ்பேஸ் 4 செயற்கைக் கோள்கள் மற்றும் லிதுவேனியாவை சேர்ந்த தொழில் நுட்ப பயனுக்கான ஆர்2 என மொத்தம் 9 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத் தப்பட்டுள்ளன. இவை கடல்சார் ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப பணிகளுக்கு பயன்படும்.

l பிஎஸ்எல்வி வகையில் இது 51-வது ராக்கெட். மேலும், இது 2 உந்துவிசை மோட்டார் கொண்ட டிஎல் ரகத்தில் 2-வது பிஎஸ்எல்வியாகும். இதுதவிர 1999-ம் ஆண்டு முதல் பிஎஸ்எல்வி வகை ராக் கெட்கள் மூலம் இதுவரை 375 செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் வெற்றி கரமாக நிலைநிறுத்தியுள்ளது. அதில் 47 செயற்கைக்கோள்கள் இந்தியாவுக்கும், 328 வெளிநாடுகளுக்கும் சொந்தமான வைகளாகும். இதன்மூலம் சர்வதேச சந்தையில் பிஎஸ்எல்வியின் வர்த்தக மதிப்பு மேலும் உயர்ந்து இந்த திட்டம் முக்கிய மைல்கல்லாக அமைந்து விட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x