

நீண்ட ஆய்வுக் கட்டுரைகள், புத்தகங்கள், அறிக்கைகள், தொழில்நுட்ப ஆவணங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து நமக்குத் தேவையான தகவல்களைத் தேடியெடுப்பது சவாலானது. இதை எளிதாக்கும் செயற்கை நுண்ணறிவுக் கருவிதான் AskYourPDF. ஆவணங்களைப் பதிவேற்றி, அவற்றின் உள்ளடக்கம் குறித்து இயல்பான மொழியில் கேள்விகள் கேட்டு, தொடர்புடைய பதில்களைப் பெற இந்தக் கருவி உதவுகிறது.
இந்தக் கருவி பெரும் மொழி மாதிரிகள் (LLMs), இயற்கை மொழிச் செயலாக்கம் (NLP), தகவல் மீட்டெடுப்பு, Retrieval-Augmented Generation (RAG) போன்ற அணுகுமுறைகளை இதற்காகப் பயன்படுத்துகிறது. ஆவணங்களில் இருந்து பொருத்தமான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் அடிப்படையில் பதில்களை உருவாக்குவதுதான் இதன் முக்கியச் செயல்பாடு.
ஆவணங்களுடன் உரையாடல்
PDF, DOCX, PPTX, TXT, CSV, EPUB போன்ற கோப்புகளை இதில் பதிவேற்றி, “இந்த ஆய்வின் நோக்கம் என்ன?”, “முக்கிய முடிவுகள் யாவை?” போன்ற கேள்விகளைக் கேட்கலாம். சிக்கலான கருத்துகளுக்கு எளிய விளக்கங்களையும் பெறலாம். பதில்களுடன் தொடர்புடைய பக்கங்களையும் பத்திகளுக்கான மேற்கோள் இணைப்புகளையும் இந்தக் கருவி வழங்குகிறது. இதனால், தகவல்களை எளிதாக மூல ஆவணத்தோடு ஒப்பிட்டுச் சரிபார்க்க முடியும்.
கருத்துச் சுருக்கம்
நீண்ட ஆவணங்களின் அடிப்படைக் கருத்துகள், முக்கிய வாதங்கள், ஆய்வு முறை, முடிவுகள் ஆகியவற்றைச் சுருக்கிப் பெறலாம். குறிப்பிட்ட ஓர் அத்தியாயத்தையோ பத்தியையோ மட்டுமேகூடச் சுருக்கிக் கருத்துகளைப் பெற முடியும். மாணவர்கள் விரைவாகப் பாடங்களைத் திருப்பிப்பார்க்கவும், ஆராய்ச்சியாளர்கள் ஒரு கட்டுரையை விரைந்து வாசிக்கவும் இத்தளம் உதவுகிறது.
பல ஆவணங்களை ஒப்பிடுதல்
Knowledge Base வசதியைக்கொண்டு பல ஆவணங்களை ஒருங்கிணைத்து கேள்விகள் கேட்கலாம். வெவ்வேறு ஆய்வுகளின் அணுகுமுறைகள், கண்டறிதல்கள், வேறுபாடுகள் ஆகியவற்றை ஒப்பிட முடியும். Optical Character Recognition (OCR) தொழில்நுட்பத்தின் மூலம் படமாக உள்ள உரைகளையும்கூட வாசிக்க முடியும். தெளிவற்ற படங்களை இக்கருவியின் மூலம் வாசிக்கும்போது பிழைகள் ஏற்படக்கூடும். மேலும், சிறப்பு வசதிகளைப் பயன்படுத்துவதற்குக் கட்டணம் செலுத்த வேண்டிய திருக்கும்.
பிற தளங்களுடன் இணைப்பு
இணைய உலாவி, Chrome நீட்டிப்பு, Android, iOS செயலிகள் வழியாக இக்கருவியைப் பயன்படுத்தலாம். Zotero இணைப்பும் உருவாக்குநர்களுக்கான API வசதியும் வழங்கப்படுகின்றன. இதனால் ஆவண வாசிப்பை அன்றாடக் கல்வி, பணிச் செயல்பாடுகளுடன் இணைப்பது எளிது.
வழக்கமான தேடலில் இருந்து வேறுபாடு
வழக்கமான Ctrl+F என்பது குறிப்பிட்ட சொல்லைத் தேட உதவுகிறது. AskYourPDF கருவியோ ஒரு கருத்தை வேறு சொற்களில் விளக்கியிருந்தாலும் அதனுடன் தொடர்புடைய பகுதிகளை அடையாளம் கண்டு பயனரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முயல்கிறது. ஆயினும், இக்கருவி கொடுக்கப்பட்ட ஆவணத்தை முழுமையாகப் புரிந்துகொண்டதாகப் பயனர்கள் கருதக்கூடாது.
எடுத்துக்காட்டாக, ஒரே தலைப்பிலான ஐந்து ஆய்வுக் கட்டுரைகளைப் பதிவேற்றி, அவற்றின் தரவுத் தொகுப்புகள், ஆய்வு முறைகள், மதிப்பீட்டு அளவுகோல்கள், முக்கிய முடிவுகள் ஆகியவற்றை ஒப்பீட்டு அட்டவணையாகப் பெறலாம். எந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட முடிவு இடம்பெற்றுள்ளது என்பதையும் அறியலாம். ஆனால் எண்கள், அட்டவணைகள், படங்கள் போன்றவற்றைச் செய்யறிவு தவறாகப் புரிந்து ள்ளக்கூடும். ஆகவே, அது தரும் தகவல்களைப் பயன்படுத்தும் முன், மூல ஆதாரங்களோடு ஒப்பிட்டுப்பார்ப்பது அவசியம். இக்கருவியை இலவசமாகப் பயன்படுத்தும்போது உள்ளீடு செய்யப்படும் கோப்பின் அளவு, பக்கங்களின் எண்ணிக்கை, கேட்கப்படும் கேள்விகளுக்குக் குறிப்பிட்ட சில வரம்புகள் உண்டு.
யாருக்குப் பயன்படும்?
மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், ஆவணப் பகுப்பாளர்கள் இதைப் பயன்படுத்தலாம். குறிப்பாக, ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்தல், ஒப்பிடுதல், பாடக்குறிப்புகளைத் தயாரித்தல், அறிக்கைகளின் முக்கிய அம்சங்களை அறிதல் போன்ற பணிகளுக்கு இக்கருவி பெரிதும் உதவுகிறது. AskYourPDF நமது நேரத்தைச் சேமிக்க உதவும் துணைக்கருவியே தவிர, அது ஒரு போதும் மனித வாசிப்புக்கும் சிந்தனைத் திறனுக்கும் மாற்றாகாது. இணையத்தளம்: https://askyourpdf.com/
செய்யறிவு விதி: செய்யறிவு வழங்கும் விளக்கங்களும் மேற்கோள்களும் தவறாக இருக்கக்கூடும். முக்கியமான தகவல்களைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டியது பயனரின் கடமை. ரகசியமான, தனிப்பட்ட தகவல்களைக் கொண்ட ஆவணங்களைப் பதிவேற்றும் முன் செய்யறிவுக் கருவிகளின் தரவுப் பாதுகாப்புக் கொள்கையை நன்றாகப் படித்து, அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
- மேலும் கற்கலாம்.
- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.