இன்றைய டிஜிட்டல் உலகில் தனிநபர்கள் முதல் சிறு தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் வரை அனைவருக்கும் இணையத்தளம் முக்கியமான அடையாளமாக மாறியுள்ளது.
ஆனால், இணையத்தளங்களை உருவாக்குவதற்கு நிரலாக்க அறிவும் (Coding), வடிவமைப்புத் திறனும் அவசியம் என்கிற எண்ணம் பலரிடமும் உள்ளது. இத்தகைய சவால்களை எளிதாகத் தீர்க்க உதவும் தளமாக Framer விளங்குகிறது.
வடிவமைப்புக்கும் மாதிரி உருவாக்கத்துக்கும் (Prototyping) தொடக்கக் காலத்தில் பயன்படுத்தப்பட்டுவந்த Framer, தற்போது செய்யறிவு முகவர்கள் (AI Agents), உள்ளடக்க மேலாண்மை (CMS), இணையத்தள வெளியீடு (Hosting) உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த தளமாகத் தன்னை வளர்ந்துக்கொண்டு உள்ளது.
செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைப்பு (AI Design Agent)
நமக்குத் தேவையான இணையத்தளத்தை எளிய ஆங்கிலக் கட்டளைகளில் (Prompts) விவரித்தால், செய்யறிவு அதன் பக்க அமைப்பு, பிரிவுகள் (Sections), தலைப்புகள், உள்ளடக்கங்களை உருவாக்க உதவுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு பள்ளிக்கான இணையத்தளம் வேண்டும் என்று குறிப்பிட்டால், முகப்புப் பக்கம், பாடத்திட்ட விவரங்கள், ஆசிரியர்கள், அறிவிப்புகள் போன்றவற்றுக்கான பிரிவுகளை உருவாக்கலாம். பின்னர் அவற்றைத் தேவைக்கேற்ப மாற்றியமைக்கவும் செய்யலாம்.
காட்சிவழித் திருத்தம் (Visual Canvas)
செய்யறிவு உருவாக்கிய வடிவமைப்புகளை நிரலாளர்கள் நேரடியாகத் திருத்தவும், எழுத்துருக்கள், நிறங்கள், படங்கள், அனிமேஷன், பக்க அமைப்புகள் போன்றவற்றை மாற்றியமைக்கவும் முடியும். மேலும், கணினி, டேப்லெட், திறன்பேசி ஆகியவற்றின் திரை அளவுகளுக்கு ஏற்ப இணையத்தளம் தன்னைத்தானே மாற்றியமைத்துக்கொள்ளுமாறு செய்யவும் முடியும்.
உள்ளடக்க மேலாண்மையும் நிரலாக்கமும் (CMS & Code Agents)
CMS Agent மூலம் கட்டுரைகள், செய்திகள், அறிவிப்புகள் உள்ளிட்ட இணையத்தள உள்ளடக்கங்களை உருவாக்கவும், ஒழுங்கமைக்கவும், புதுப்பிக்கவும் முடியும். Code Agent மூலம் ஊடாடும் கூறுகள் (Interactive Components), குறிப்பிட்ட சில செயல்பாடுகளுக்கான நிரல்களை உருவாக்கலாம். இருப்பினும், உருவாக்கப்பட்ட நிரல்களின் செயல்பாட்டையும் பாதுகாப்புக் கூறுகளையும் நிரலாளர் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
பிற செய்யறிவுக் கருவிகளுடன் இணைப்பு (MCP Integration)
Model Context Protocol (MCP) என்கிற தொழில்நுட்பத்தின் மூலம் Claude, Cursor, Codex போன்ற இணக்கமான செய்யறிவுக் கருவிகளை Framer உடன் இணைக்கலாம். இதன்மூலம் இணையத்தளப் பக்கங்களை உருவாக்குதல், வடிவமைப்பை மாற்றுதல், உள்ளடக்கங்களைப் புதுப்பித்தல், CMS பதிவுகளை நிர்வகித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.
தேடுபொறி மேம்பாடும் பகுப்பாய்வும் (SEO & Analytics)
தேடுபொறி மேம்பாடு (SEO), செய்யறிவு அடிப்படையிலான தேடல்களுக்கான உள்ளடக்க மேம்பாடு (AEO), பார்வையாளர் பகுப்பாய்வு (Analytics), பலமொழி ஆதரவு (Localization) போன்ற வசதிகளும் இதில் உள்ளன. மேலும், இரண்டு வடிவமைப்புகளின் செயல்திறனை ஒப்பிடும் A/B சோதனையையும் மேற்கொள்ளலாம். இருப்பினும், சில மேம்பட்ட வசதிகளைப் பெற கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.
பிற கருவிகளில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் நிரலாக்க முறைகளுடன் ஒப்பிடும்போது, Framerஇல் செய்யறிவின் உதவியுடன் வடிவமைத்தல், காட்சிவழித் திருத்தம், உள்ளடக்க மேலாண்மை, இணையத்தள வெளியீடு ஆகியவற்றை எளிதாக ஒரே இடத்தில் மேற்கொள்ள முடிகிறது. தொடக்கநிலை நிரலாக்கத்திறன் கொண்டவர்கள்கூட இணையத்தளங்களை உருவாக்குவதும் இதனால் சாத்தியமாகிறது.
யாருக்குப் பயன்படும்?
UI/UX வடிவமைப்பாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்முனைவோர், டிஜிட்டல் சந்தைப்படுத்தல் குழுக்கள், சிறு நிறுவனங்களுக்கு இந்தத் தளம் பயனுள்ளதாக இருக்கும்.
செய்யறிவின் உதவியுடன் இணையத்தளங்களை விரைவாக வடிவமைத்து வெளியிட Framer உதவுகிறது. இருப்பினும், தரமான உள்ளடக்கம், சிறந்த பயனர் அனுபவம், தகவல் துல்லியம், தகவல் பாதுகாப்பை உறுதிசெய்வதில் மனிதர்களின் பங்கும் இன்றியமையாதது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக ஒரு கட்டளை: Create a modern, responsive personal portfolio website for a college student. Include Home, About Me, Education, Skills, Projects, Achievements, and Contact sections. Use a professional blue-and-white theme, attractive fonts, smooth animations, and simple navigation. Make it mobile-friendly, visually appealing, and easy to customize. Include sample content and project images.
இணையத்தளம்: https://www.framer.com/
- மேலும் கற்கலாம்.
- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.