

உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள், வரலாற்றுச் சின்னங்கள், அரிய ஓவியங்களை நேரில் சென்று பார்ப்பது அனைவருக்கும் சாத்தியமல்ல. இந்த இடைவெளியைக் குறைத்து, உலகின் கலை, பண்பாட்டுப் பொக்கிஷங்களை இணையத்தின் வழியாக அனைவரிடமும் கொண்டுசேர்க்கும் தளம்தான் ‘Google Arts & Culture.’
கூகுள் நிறுவனத்தின் வணிக நோக்கமற்ற முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தளம், உயர் தெளிவுத்திறன் கொண்ட டிஜிட்டல் படங்கள், 360 டிகிரி மெய்நிகர் சுற்றுலாக்கள், முப்பரிமாண மாதிரிகள், செய்யறிவு சார்ந்த சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துச் செயல்படுகிறது. இந்தத் தளத்தின் வழியே கட்டணமில்லாமல் உலகக் கலை, வரலாறு, பண்பாட்டை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.
ஓவிய நுணுக்கங்களை ஆராய உதவும் ஆர்ட் கேமரா
வின்சென்ட் வான் கோ போன்ற புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகளை மிக உயர்ந்த தெளிவுத்திறனில் பார்ப்பதற்கு ‘ஆர்ட் கேமரா’ தொழில்நுட்பம் உதவுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்களில் உள்ள நுண்ணிய தூரிகைத் தடங்கள், வண்ணக் கலவைகள் உள்ளிட்டவற்றை இதன் மூலம் பெரிதாக்கிப் பார்க்க முடியும்.
செய்யறிவு மூலம் கலையை அறிதல்
இந்தத் தளத்தில் இயந்திரக் கற்றலையும், செய்யறிவையும் பயன்படுத்தும் பல்வேறு பரிசோதனை அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ஆர்ட் செல்ஃபி என்கிற அம்சம் நம் புகைப்படத்தை அருங்காட்சியகங்களின் ஓவியங்களில் இடம்பெறும் முகங்களுடன் ஒப்பிட்டு, தோற்றத்தில் ஒற்றுமையுள்ள கலைப்படைப்புகளைக் கண்டறிய உதவுகிறது.
மேலும், ஆர்ட் செல்ஃபி 2 என்கிற செய்யறிவு வசதி, நமது புகைப்படத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலை, வரலாற்றுப் பின்னணிகளுடன் இணைத்துப் புதிய படங்களை உருவாக்குகிறது.
அருங்காட்சியகங்களையும் வரலாற்றுச் சின்னங்களையும் பார்வையிட...
மெய்நிகர் சுற்றுலா, 360 டிகிரி காட்சிகள், முப்பரிமாண மாதிரிகள் மூலம் உலகின் பல்வேறு பண்பாட்டு இடங்களை வீட்டிலிருந்தே காணலாம். ‘பாக்கெட் கேலரி’ என்கிற அம்சம், ஆக்மென்டட் ரியாலிட்டி (Augmented Reality – AR) தொழில்நுட்பத்தின் உதவியுடன் திறன்பேசிகளில் நமது அறையிலேயே ஒரு மெய்நிகர் கலைக்கூடம் இருப்பது போன்ற அனுபவத்தை வழங்குகிறது.
கதைகள் மூலம் கற்றல்
கலையையும் வரலாற்றையும் படிப்பதோடு மட்டுமல்லாமல், அனுபவித்துக் கற்கவும் இந்தத் தளம் வாய்ப்பளிக்கிறது. வரலாற்று நிகழ்வுகள், பாரம்பரிய ஆடைகள், கட்டிடக்கலை, இசை, பண்பாடுகளைப் பற்றிய விளக்கக் கட்டுரைகள், காணொளிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடியோ வழிகாட்டிகள், புதிர் விளையாட்டுகள் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.
காலவரிசையும் கலை இயக்கங்களும்
இந்தத் தளத்தில் கலைப்படைப்புகளை அவை உருவான காலம், கலைஞர்கள், கலை இயக்கம், வரலாற்று நிகழ்வுகள் போன்ற பல்வேறு அடிப்படைகளில் தேடலாம். உதாரணமாக, சர்ரியலிசம் (Surrealism) போன்ற கலை இயக்கங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுடன் தொடர்புடைய ஓவியங்களையும் கலைஞர்களையும் அறிந்து கொள்ளலாம். இந்த வசதி, கலை வரலாற்றின் வளர்ச்சியையும் வெவ்வேறு காலக்கட்டங்களின் கலைப் பாணிகளையும் ஒப்பிட்டு அறிய உதவுகிறது.
இணையத் தேடலில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
சாதாரண இணையத் தேடுபொறிகள் ஓவியங்கள், அருங்காட்சியகங்கள், வரலாற்றுச் சின்னங்கள் பற்றிய படங்களையும் தகவல்களையும் கண்டறிய உதவுகின்றன. ஆனால் Google Arts & Culture தளமோ, பல்வேறு டிஜிட்டல் தொகுப்புகளை ஒரே இடத்தில் ஆராயும் வாய்ப்பை வழங்குகிறது.
யாருக்குப் பயன்படும்?
வரலாறு, நுண்கலை, தொல்லியல், கட்டிடக்கலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், வடிவமைப்பாளர்கள், பண்பாடுகளை அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தத் தளம் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, ஆசிரியர்கள் வகுப்பறைகளில் வரலாற்றுச் சின்னங்கள், கலைப்படைப்புகள், பண்பாட்டு மரபுகளை மாணவர்களுக்குக் காட்சிப்படுத்தி விளக்குவதற்கு இதைப் பயன்படுத்தலாம்.
உலகின் கலை, கலாச்சாரப் பாரம்பரியத்தை டிஜிட்டல் வடிவில் ஆவணப்படுத்தி, பொதுமக்களிடமும் கொண்டுசேர்ப்பதில் சிறப்புறச் செயல்படுகிறது Google Arts & Culture தளம்.
இணையத்தளம்: https://artsandculture.google.com/
- மேலும் கற்கலாம்.
- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.