

விடுமுறை நாள்களில் எங்கே செல்வது, எந்தெந்த இடங்களைப் பார்வையிடுவது, எங்கே தங்குவது போன்ற கேள்விகளுக்குப் பதிலளித்து, பயணத் திட்டமிடலை எளிதாக்கும் செய்யறிவுத் தளம்தான் Mindtrip. பயனர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப சுற்றுலாத் தலங்கள், உணவகங்கள், தங்குமிடங்கள், பயண வழித்தடங்கள் ஆகியவற்றைப் பரிந்துரைத்து, முழுமையான பயணத் திட்டத்தை உருவாக்க உதவுகிறது.
செய்யறிவு (Artificial Intelligence), இயற்கை மொழிச் செயலாக்கம் (NLP) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் இந்தத் தளம், பயணம் தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கிறது.
பயனருக்கு ஏற்ற பயணத் திட்டங்கள் (Personalized Itineraries)
பயணம் செய்ய விரும்பும் இடம், நாள்கள், பட்ஜெட், தனிப்பட்ட விருப்பங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டால், அதற்கேற்ப நாள்வாரியான பயணத்திட்டத்தை இது உருவாக்குகிறது. உதாரணமாக, குடும்பத்துடன் மூன்று நாள்கள் சென்னை செல்ல விரும்புவோர், குழந்தைகளுக்கு ஏற்ற சுற்றுலாத் தலங்களையும் உணவகங்களையும் எளிதில் கண்டறியலாம்.
ஊடாடும் வரைபடங்கள் (Interactive Maps)
பரிந்துரைக்கப்படும் இடங்களின் புகைப்படங்கள், மதிப்புரைகள், வரைபடங்களை (Maps) ஒரே இடத்தில் பார்க்கலாம். அருகருகே உள்ள சுற்றுலாத் தலங்களை அறிந்துகொள்ளவும் அவற்றுக்கு இடையேயான பயணத்தொலைவை மதிப்பிடவும் இது உதவுகிறது.
பலவகை உள்ளடக்க உள்ளீடு (Multimodal Content Ingestion)
சமூக ஊடகங்களில் பார்க்கும் சுற்றுலாக் காணொளிகள், இணையதளக் கட்டுரைகள், ஒளிப்படங்கள், பயணக் குறிப்புகளைப் பயன்படுத்தி புதிய பயணத் திட்டங்களை உருவாக்கவும் இதில் வசதியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, யூடியூப் காணொளியில் இடம்பெறும் சுற்றுலாத் தலங்களை அடையாளம் கண்டு, அவற்றைப் பயணத் திட்டத்தில் இணைக்க முடியும்.
குழுப் பயணங்கள்
நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் ஒரே பயணத் திட்டத்தைப் பகிர்ந்து, இணைந்து மாற்றங்களைச் செய்யலாம். ஒவ்வொருவரும் விரும்பும் இடங்களைச் சேர்த்து, அனைவருக்கும் ஏற்ற பயணத்தைத் திட்டமிட இது உதவுகிறது.
முன்பதிவு வசதி (Booking Assistance)
விமானங்கள், விடுதிகள், சுற்றுலா அனுபவங்களுக்கான முன்பதிவு வாய்ப்புகளையும் இதன் வழியே அறியவும், முன்பதிவு செய்யவும் முடியும். பயண முன்பதிவுகள் தொடர்பான விவரங்களை ஒரே இடத்தில் அணுகும் வசதியும் உள்ளது.
உரையாடல் மூலம் திட்டங்களை மாற்றுதல்
ஏற்கெனவே உருவாக்கப்பட்ட பயணத் திட்டத்தைச் சாதாரண உரையாடல் (Chat) வழியே எளிதில் மாற்றலாம். எடுத்துக்காட்டாக, ‘முதல் நாள் அருங்காட்சியகத்துக்குப் பதிலாகக் கடற்கரைக்குச் செல்ல வேண்டும்’ என்று கேட்டால், அதற்கேற்பப் பயணத் திட்டத்தை மாற்றியமைக்க உதவுகிறது.
பயண வழித்தடங்களும் பரிந்துரைகளும்
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள், பயணத் தொலைவு, பயண வழித்தடங்கள் போன்றவற்றைக் கருத்தில்கொண்டு திட்டமிடும் வசதியையும் இந்தத் தளம் வழங்குகிறது. மேலும், பயண விருப்பங்களை நினைவில் வைத்து எதிர்காலப் பயணங்களுக்கும் பொருத்தமான பரிந்துரைகளை வழங்குகிறது.
பிற கருவிகளில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
பொதுவான பயண வழிகாட்டித் தளங்கள் வெறும் பட்டியல்களை மட்டுமே காட்டும். நமக்கேற்றபடி முழுமையான பயணத் திட்டத்தை உருவாக்கவும், மாற்றியமைக்கவும் அவற்றில் வாய்ப்புகள் குறைவு. செய்யறிவின் துணையுடன் செயல்படும் Mindtrip தளமோ, பயணத் திட்டமிடலில் தொடங்கி, வரைபட ஒருங்கிணைப்பு, நேரடி முன்பதிவு வரை அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்குகிறது.
யாருக்குப் பயன்படும்?
தனியாகப் பயணம் செய்வோர், குடும்பத்துடனும் நண்பர்களுடனும் சுற்றுலா செல்பவர்கள், பயண ஆலோசகர்களுக்கு இந்தத் தளம் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், பயனர்கள் செய்யறிவு தரும் நேரம், கட்டணங்கள், முன்பதிவு விவரங்களை அதிகாரபூர்வத் தளங்களில் சரிபார்த்துக்கொள்வது அவசியம். அதன் வழியே, பயணத்தின்போதான எதிர்பாரா நிகழ்வுகளையும் ஏமாற்றங்களையும் தவிர்க்கலாம். பயணத் திட்டமிடலில் செலவிடும் நேரத்தைக் குறைத்து, புதிய இடங்களை எளிதாகக் கண்டறிய உதவும் டிஜிட்டல் பயண உதவியாளராக Mindtrip செயல்படுகிறது இணையதளம்: https://mindtrip.ai/
எடுத்துக்காட்டாக ஒரு கட்டளை: நான் சென்னையில் இருந்து ஊட்டிக்கு மூன்று நாள்கள் தனியாகப் பயணம் செய்ய விரும்புகிறேன். எனது மொத்த பட்ஜெட் ரூ. 12,000. இயற்கைக் காட்சிகள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்க்க விரும்புகிறேன். பாதுகாப்பான தங்குமிடங்கள், போக்குவரத்து வசதிகள், சுற்றுலாத் தலங்கள், உணவகங்கள், நுழைவுக் கட்டணங்கள், தோராயமான செலவுகளுடன் நாள் வாரியான பயணத்திட்டத்தை உருவாக்கவும். ஒவ்வொரு இடத்துக்குமான வரைபட இணைப்புகள், பயண நேரம், பாதுகாப்பு ஆலோசனைகளையும் சேர்க்கவும்.
- மேலும் கற்கலாம்.
- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்