

இயற்கையை நேசிப்பவர்கள், மாணவர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் தங்களைச் சுற்றியுள்ள தாவரங்கள், பூச்சிகள், பறவைகள், காளான்களை எளிதில் அடையாளம் காண உருவாக்கப்பட்டுள்ள இலவசச் செயலியே Seek by iNaturalist ஆகும். கலிபோர்னியா அறிவியல் அகாடமி, நேஷனல் ஜியோகிரஃபிக் நிறுவனங்களின் ஆதரவோடு உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கருவி, அதிநவீனப் பட அங்கீகாரத் தொழில்நுட்பத்தைத் (Image Recognition Technology) தன்னுள் கொண்டிருக்கிறது.
திறன்பேசி கேமரா மூலம் இயங்கும் இச்செயலி, நாம் பார்க்கும் உயிரினங்களை உடனே அடையாளம் கண்டு, அவை குறித்த பல்வேறு தகவல்களை வழங்குகிறது.
கேமராவழி உடனடி அடையாளம் (Real-time Camera Recognition)
Seek செயலியின் கேமராவைத் திறந்து செடிகள், மரங்கள், பூச்சிகளை நோக்கினால் கணினி பார்வை (Computer Vision) தொழில்நுட்பம் உடனுக்குடன் அந்த உயிரினத்தைக் கணித்துத் திரையில் காட்டுகிறது. மேலும், அந்த உயிரினம் எந்தக் குடும்பம் (Family), பேரினம் (Genus), சிற்றினத்தைச் (Species) சேர்ந்தது என்கிற துல்லியமான தகவல்களையும் வழங்குகிறது.
ஆஃப்லைன் பயன்பாடு (Offline Capabilities)
இதைப் பயன்படுத்த எந்தவொரு கணக்கையும் உருவாக்கத் தேவையில்லை என்பதால் குழந்தைகளும் பள்ளி மாணவர்களும் தயக்கமின்றித் தரவிறக்கலாம். இதில் வழங்கப்படும் பயனர்களின் இருப்பிடத் தரவுகளும் ரகசியமாகப் பராமரிக்கப்படுகின்றன. மேலும், பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுத்தளத்தின் மூலம் இணைய இணைப்பு இல்லாத ஆஃப்லைன் காடுகளிலும் இச்செயலியைப் பயன்படுத்தலாம்.
விளையாட்டும் பதக்கங்களும் (Gamified Challenges & Badges)
பயனர்கள் வெவ்வேறு வகையான பறவைகள், ஊர்வன, தாவரங்கள், காளான்களைக் கண்டறியும்போதும் பிரத்யேகப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. மாதந்திர சவால்கள் மாணவர்களிடையே இயற்கை அறிவியல் மீதான பேரார்வத்தை விதைக்கின்றன.
உலகளாவிய பல்லுயிர் தரவுத்தளம் (iNaturalist Ecosystem & Local Biodiversity)
கோடிக்கணக்கான இயற்கை ஆய்வாளர்களின் தரவுகளை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் இத்தளத்தில், நாம் இருக்கும் பகுதியைச் சுற்றி எந்தெந்தத் தாவரங்களும் உயிரினங்களும் இருக்கின்றன என்றகிற தகவல்கள் அடங்கிய உள்ளூர் தரவுப் பட்டியல் (Local Species Lists) இணைக்கப்பட்டுள்ளது.
புகைப்படப் பதிவேற்றமும் பருவக்காலத் தகவல்களும் (Photo Uploads & Seasonal Data)
நேரலை கேமரா மட்டுமன்றி, நம்மிடம் உள்ள பழைய புகைப்படங்களைப் பதிவேற்றியும் உயிரினங்களை அடையாளம் காணலாம். மேலும், குறிப்பிட்ட உயிரினம் ஆண்டின் எந்தப் பருவத்தில் அதிகமாகக் காணப்படும் என்கிற பருவக் கால வரைபடத்தையும் இந்தச் செயலியில் காணமுடியும்.
பிற செய்யறிவுக் கருவிகளில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
கூகுள் லென்ஸ் போன்ற பொதுவான பொருள்களை அடையாளம் காணும் செயலிகள் இணையமற்ற சூழலில் இயங்குவதில்லை. மேலும் உயிரியல் வகைப்பாடு சார்ந்த தரவுகளையும் அவை முழுமையாக வழங்குவதில்லை. ஆனால், Seek by iNaturalist செயலியில் உயிர்வகைப்பாட்டியல் (Taxonomy) சார்ந்த பல தகவல்களைத் தடையின்றிப் பெறும் வசதியுள்ளது. ஆகவேதான், இக்கருவி சர்வதேச அறிவியல் சமூகத்தால் இயற்கைக்கான டிஜிட்டல் வழிகாட்டிகளுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு இது மிகவும் பயன்படும்?
பள்ளி, கல்லூரி மாணவர்கள், உயிரியல் ஆசிரியர்கள், சூழலியல் ஆராய்ச்சியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், வெளியில் செல்லும்போது இயற்கையைக் கற்க விரும்பும் அனைவருக்கும்.
இயற்கை பற்றிய ஆர்வத்தைத் தூண்டி, நம்மைச் சுற்றியிருக்கும் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் புரிந்துகொள்ளச் செய்வதில் Seek by iNaturalist செயலியின் பங்கு முக்கியமானது.
செய்யறிவு விதி
செய்யறிவுக் கருவிகள் தரும் செய்திகள் உண்மையானவைதானா என்பதை உறுதிப்படுத்தாமல் சமூக ஊடகங்களில் பகிராதீர்கள். உண்மைக்கு மாறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க உதவுங்கள். தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதே நல்ல குடிமகனுக்கு அழகு.
தரவிறக்க: https://play.google.com/store/apps/details?id=org.inaturalist.seek
- மேலும் கற்கலாம்.
- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.