

செய்யறிவின் துணையுடன் படங்களை உருவாக்கும் (Image Generation) பல கருவிகள் இன்றுள்ளன. ஆயினும், அவற்றைப் பயன்படுத்தும்போது ஏராளமான கட்டளைகளை (Prompts) எழுத வேண்டியதிருக்கும். அத்துடன், எதிர்மறைக் கட்டளைகளைக் (Negative Prompts) குறிப்பிடுவதற்கும் சிக்கலான அமைப்புகளை (Sampler, Steps, CFG Scale)கையாள்வதற்கும் பயனருக்கு நுட்பமான தொழில்நுட்ப அறிவு தேவையாக இருக்கிறது. இந்தச் சிரமத்தை முற்றிலும் போக்கி, எளிய முறையில் தொழில்முறை தரத்திலான அதிநவீனப் படங்களை உருவாக்க உதவும் பொது வள (Open-Source) கருவியே Fooocus ஆகும்.
பிரபலமான Midjourney-இன் பயன்பாட்டு முறையையும் Stable Diffusion XL (SDXL)இன் ஆற்றலையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இது, எந்தவொரு தொழில்நுட்பப் பயிற்சியும் இல்லாதவரும்கூட எளிதாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிக்கலற்ற பயனர் இடைமுகப்பு (Clean User Interface): Stable Diffusion போன்ற மென் பொருள்களில் உள்ள நூற்றுக்கணக்கான குழப்பமான அமைப்புகளை நீக்கிவிட்டு, மிக எளிய இடைமுகப்பை Fooocus வழங்கிறது. பயனர்கள் எங்குமே தடுமாறாமல் தாங்களே புரிந்துகொள்ளும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேம்பட்ட படக்கட்டளைகள் (Advanced Image Prompts): உரைநடை வடிவங்களைக் கொண்டு படம் உருவாக்குவதோடு நின்றுவிடாமல், ஏற்கெனவே உள்ள ஒரு படத்தின் பாணி (Image Prompt), தோற்றம் (Face Swap / CPDS), காட்சியமைப்பை அப்படியே மற்றொரு படத்துக்கு மாற்றும் அதிநவீன வசதி இதில் உள்ளது. இதனால் நாம் விரும்பும் துல்லியமான படத்தைப் பெற முடிகிறது.
படத்தில் மாற்றங்களைச் செய்யும் வசதி (Image Editing Controls): ஒரு படத்தில் உள்ள தேவையற்ற பகுதியை மட்டும் நீக்கிவிட்டுப் புதிய கூறுகளைச் சேர்க்கும் ‘Inpainting’ வசதியும் படத்தின் எல்லைகளை விரிவுபடுத்தி பெரிய காட்சிப் பின்னணியை உருவாக்கும் ‘Outpainting’ வசதியும் இதில் இருக்கின்றன.
பன்மைத் தரத்தில் அமைந்த பல்வேறு பாணிகள் (Built-in Styles & Quality): பயனர்கள் தங்களுக்குத் தேவையான புகைப்படப் பாணியை (Cinematic, Anime, Cyberpunk, Watercolor உள்ளிட்ட பல வகைகள்) ஒரே தொடுதலில் தேர்வு செய்யலாம். எவ்விதக் கூடுதல் கட்டளைகளும் இன்றி கேமரா கோணங்கள், லென்ஸ் விவரங்கள், வெளிச்சம் (Lighting) ஆகியவை தானாகவே சிறந்த முறையில் அமைக்கப்பட்டுவிடுகின்றன.
இணையமில்லா இயக்கம் (Offline Execution): இதுவொரு பொது வள (Open Source) மென்பொருள் என்பதால், பயனர்கள் இதைத் தங்கள் கணினியிலேயே (Local PC) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். சாதாரண கிராபிக்ஸ் கார்டு (Low VRAM GPU) கொண்ட கணினிகளிலும்கூட மிகவும் வேகமாக இயங்கும் வகையில் இதன் குறியீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிற செய்யறிவுக் கருவிகளில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது? - கிளவுட் சேவையகங்களில் இருந்து இயங்கும் Midjourney, DALL-E உள்ளிட்ட கருவிகளைப் பயன்படுத்த இணைய இணைப்பு கட்டாயமாகத் தேவை. மேலும், அவற்றுக்கு மாதந்தோறும் கட்டணம் செலுத்தவும் வேண்டியதிருக்கும். ஆனால், Fooocus AI கணினியிலேயே இயங்குவதால், சிக்கல் இல்லாமல் மிக அழகான புகைப்படங்களை எளிதாக உருவாக்கித் தருகிறது.
யாருக்கு இது பயன்படும்? - வரைகலை வடிவமைப்பாளர்கள் (Graphic Designers), டிஜிட்டல் கலைஞர்கள், விளம்பரதாரர்கள், எழுத்தாளர்கள், புகைப்படத் தயாரிப்பில் ஆர்வம் கொண்டவர்கள்.
தொழில்நுட்பச் சிக்கல்களைக் கடந்து, கற்பனையில் உருவான காட்சிகளை எளிய முறையில் அழகான புகைப்படங்களாக மாற்றியமைப்பதில் Fooocus முக்கியப் பங்கு வகிக்கிறது.
https://github.com/lllyasviel/
Fooocus
செய்யறிவு விதி: செய்யறிவுக் கருவிகள் தரும் தகவல்கள் எப்போதும் 100% சரியானவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சில நேரம் அவை தவறான, காலாவதியான தகவல்களை அளிக்கலாம். செய்யறிவின் எல்லை அது என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.
எடுத்துக்காட்டாக ஒரு கட்டளை
Create a futuristic, photorealistic scientific visualization of a bioprinted human heart inside a biotechnology laboratory, featuring advanced 3D bioprinters, glowing cellular structures, researchers, and dramatic cinematic lighting.
- மேலும் கற்கலாம்.
- கட்டுரையாளர், பேராசிரியர்,
தொழில்நுட்ப எழுத்தாளர்.