‘பேரழிவு’ அச்சமூட்டும் சீனாவின் 6 மெகா திட்டங்கள்: பிரம்மபுத்திரா முதல் ‘பைஹேடான்’ வரை - ஒரு பார்வை

‘பேரழிவு’ அச்சமூட்டும் சீனாவின் 6 மெகா திட்டங்கள்: பிரம்மபுத்திரா முதல் ‘பைஹேடான்’ வரை - ஒரு பார்வை
Updated on
3 min read

வல்லரசு சீனாவின் ‘வளர்ச்சி’ என்ற கண்மூடித்தனமான ஒற்றை இலக்கு, இயற்கைக்கும் மனித சமூகத்துக்கும் இடையிலான சமநிலையைக் குலைத்து வருகிறது.

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா எழுப்பும் பிரம்மாண்ட திட்டங்கள் ஒவ்வொன்றின் பின்னால் பேரழிவின் நிழல் படிந்துள்ளன. திபெத்தின் பனிமலை உச்சியில் உருவாகும் நதிகளின் போக்கை மாற்றும் சீனாவின் 6 திட்டங்கள், மனிதகுலத்தின் தலைக்கு மேல் தொங்கும் கத்திகள்.

நேபாளத்தில் சமீபத்தில் கோஷி நதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் பேரழிவு, ஆசிய சூழலியலுக்குச் சீனாவின் திட்டங்கள் ஏற்படுத்த உள்ள ஆபத்தின் எச்சரிக்கை மணியாக இருக்கிறது. இந்தப் பேரழிவுகள் திபெத்தில் சீனா எழுப்பி வரும் நீர்மின் திட்டங்கள் மீது பல்வேறு கேள்விகளையும், கடும் விமர்சனத்தையும் எழுப்பியுள்ளது.

சீனா கடந்த சில பத்து ஆண்டுகளாக திபெத் மற்றும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சீனாவில் ‘யர்லுங் சாங்போ’ நதியாகவும், இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு ‘சியாங்’, பின்னர் ‘பிரம்மபுத்திரா’ நதியாகவும் மாறும் ஆற்றின் குறுக்கே சீனா எழுப்பி வரும் பிரமாண்ட திட்டங்களுக்கு உலகச் சூழலியல் ஆய்வாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பூகம்பம், நிலச்சரிவு மற்றும் பனிப்பாறை சரிவு நிகழக்கூடிய நிலப்பரப்பில் சீனா உள்கட்டமைப்புகளை உருவாக்குகிறது. இதன் விளைவை முன்கூட்டியே கோஷி நதியின் பேரழிவு உணர்த்தியுள்ளது.

திபெத் - இமயமலைப் பகுதியில் சீனா எழுப்பி வரும் 6 மெகா திட்டங்கள்:

1. ‘யர்லுங் சாங்போ’ வெடிகுண்டு:

திபெத்தில் உருவாகி இந்தியா மற்றும் வங்கதேசம் வழியாக பாயும் பிரம்மபுத்திரா ஆற்றுக்கு சீனா வைத்துள்ள பெயர் ‘யர்லுங் சாங்போ’. இமயமலையின் மிகவும் செங்குத்தான ‘கிராண்ட் கேனியன்’ பகுதியில் சீனா கட்டும் அணை, உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டமாகும்.

2025-ம் ஆண்டு ஜூலையில் தொடக்கப்பட்ட இந்த 5 அடுக்கு நீர்மின் நிலைய திட்டத்துக்கு 1.2 டிரில்லியன் யுவானை சீனா முதலீடு செய்துள்ளது. இந்திய மற்றும் யூரேசிய புவித்தட்டுகள் இணையும் அல்லது மோதிக்கொள்ளும் பகுதியில் இது அமைந்துள்ளதால் பூகம்பம் ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

 நில அதிர்வு மண்டலமான மேடாக்கில் அணை உடைந்தால் அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம் கடுமையாகப் பாதிக்கப்படும். நிலநடுக்கத்தால் அணை தப்பினாலும் இரண்டாம் நிலை நிலச்சரிவுகள் ஏற்படும் என சீன புவியியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

 2. சிசுவான் - திபெத் ரயில் பாதைத் திட்டம்:

 சீனாவின் லட்சியத் திட்டங்களில் முக்கியமானது சிசுவான் - திபெத் ரயில் பாதைத் திட்டம். 1,011 கி.மீ. தொலைவு கொண்ட இந்த திட்டத்துக்கு சீனா 319.8 பில்லியன் யுவான் ஒதுக்கியுள்ளது. 26 நிலையங்களைக் கொண்ட இந்த ரயில்பாதை, உலகின் மிகக்கடினமான செங்குத்தான மலைப் பாதையில் செல்கிறது.

சீனாவின் பொறியியல் வல்லுநர்களே இந்த ரயில் பாதை கடும் சவாலாக இருக்கும் என்றனர். ஏனென்றால் ரயில் பாதை முழுவதும் உலகின் மிகக்கடினமான செங்குத்தான மலைப் பாதையில்தான் செல்கிறது. இங்கு பாலங்கள், சுரங்கப்பாதைகள்,

உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவது அசாதாரண செயல், அதிலும் நிலநடுக்கம், நிலச்சரிவு அபாயம் நிறைந்த பகுதியில் ரயில்பாதை அமைப்பது சவாலானது. மனிதத் தவறுகளால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால், இத்திட்டத்தைச் சீன அரசு தற்போது மறு ஆய்வு செய்து வருகிறது.

3. உலகின் 2-வது பெரிய பைஹேடான் அணை:

சிசுவான் மற்றும் யுனான் நகரங்களுக்கு இடையே பாயும் சின்ஷா ஆற்றின் குறுக்கே பைஹேடான் நீர்மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீர்மின் திட்டம். 

16 மில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த அணையின் ஒவ்வொரு யூனிட்டும் 10 லட்சம் கிலோவாட் மின் உற்பத்தி செய்யும், பிரம்மாண்டத்தின் புதிய உச்சம்.

நீரின் அழுத்தம் பூகம்பத்தையும் நிலச்சரிவையும் தூண்டலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்தனர். 2021-ல் நீர்தேக்கப்பட்டு நீரின் அளவு 812 மீட்டராக உயர்ந்தபோதே, நிலச்சரிவு ஏற்படும் பரப்பு அதிகரிப்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டினர்.

 4. நதிநீரை மடைமாற்றும் திட்டம்:

சீனாவின் தெற்கில் உபரியாக உள்ள நீரை வடக்கிற்குத் திருப்ப 3 பிரம்மாண்ட கால்வாய்கள் மூலம் உலகின் மிகப்பெரிய நீர் மாற்றுத் திட்டத்தைச் சீனா தொடங்கியது.

62 பில்லியன் டாலரில் தொடங்கப்பட்ட இத்திட்டம் 79.40 பில்லியனாக அதிகரித்தது. நீர் எடுக்கப்படும் பகுதிகளில் ஏற்படும் சூழலியல் மாற்றங்கள், நீரின் தரம் சார்ந்த சிக்கல்கள், மக்கள் இடம்பெயர்வு, மிகப்பெரிய அளவிலான பராமரிப்புச் சுமை உள்ளிட்டவற்றில் நிலவும் சிக்கல்களை தீர்க்குமா என்ற கேள்வி நிலவுகிறது.

5. லாங்பான் - டைகர் லீப்பிங் திட்டம்:

ஜின்ஷா ஆற்றின் குறுக்கே தொடர் அணைகளைக் கட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைக்கப்படுகிறது. 2024-ல் சீனப் புவியியலாளர் ஃபான் சியாவோ, இத்திட்டம் கடுமையான புவியியல், சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரித்ததால் சீனா இதைக் கவனமாக ஆலோசித்து வருகிறது.

6. பூமியின் சுழற்சியைக் குறைத்த அணை (த்ரீ கோர்ஜஸ் டேம்):

சீனாவின், ஹுபய் மாகாணத்தில் சான்டோப்பிங் பகுதியில் குவடாங்ஜியா, வூஜியா, ஜிலிங்ஜியா ஆகிய பள்ளத்தாக்குகளை பயன்படுத்தி, ஆசியாவின் நீளமான நதியான யாங்சே குறுக்கே த்ரீ கோர்ஜஸ் அணை கட்டப்பட்டுள்ளது.

180 மீட்டர் உயரமும் 2.3 கி.மீ நீளமும் கொண்ட இந்த நீர்மின் திட்டம் 22,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. நாசா விண்வெளி ஆய்வு மையம், இந்த அணையை ஆய்வு செய்து, இதில் உள்ள  நீரின் அழுத்தத்தால் பூமி முன்பை விட சற்று தாழ்ந்துவிட்டது என்றும் அணையில் ஏற்பட்ட மிகப் பெரிய நீர் அழுத்தம் பூமியின் இயக்க வேகம் 0.06 மைக்ரோ விநாடிகள் குறைந்ததால், உலகளவில் நாளின் நீளமும் அதிகரித்து பூமி மெதுவாக சுழல ஆரம்பித்துள்ளது எனத் தெரிவித்தது.

சீனா தனது பொருளாதார ஆதிக்கத்துக்காக, ‘மனிதன் இயற்கையை வெல்ல வேண்டும்’ என்ற கம்யூனிசக் கோட்பாட்டை வைத்து இயற்கையோடு போர் நிகழ்த்துகிறது. அதன் விளைவை, உலகம் இன்று காலநிலை மாற்றமாகவும், பூகம்ப அபாயமாகவும் எதிர்கொள்கிறது. சீனாவின் இந்த 6 பிரம்மாண்ட திட்டங்களும் வெறும் பொறியியல் சாதனைகள் அல்ல; அவை பூமிப்பந்தின் எதிர்காலத்திற்கே சீனா வைத்த ‘டைம் பாம்’.

‘பேரழிவு’ அச்சமூட்டும் சீனாவின் 6 மெகா திட்டங்கள்: பிரம்மபுத்திரா முதல் ‘பைஹேடான்’ வரை - ஒரு பார்வை
மீண்டும் தலைதூக்கும் சோமாலியா கடற்கொள்ளையர்கள்? - ஈரான் போர் தாக்கமும் பின்னணியும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in