‘ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்’ ரேஸில் இந்தியாவில் முந்துவது யார்? - ஒரு டெக் பார்வை

‘ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்’ ரேஸில் இந்தியாவில் முந்துவது யார்?  - ஒரு டெக் பார்வை
Updated on
2 min read

இந்தியாவில் மடிக்கக்கூடிய தன்மை கொண்ட ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களுக்கு எதிர்காலத்தில் மிக வலுவான சந்தை உருவாகலாம். அதனால்தான் சாம்சங் நிறுவனம் தனது ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனின் 8-வது வெர்ஷனை ‘அல்ட்ரா’ (ULTRA) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

எளிதாக மடக்கி பயன்படுத்தும் விதத்திலும், புகைப்படம், வீடியோ எடுத்தலில் மேம்பட்ட தரத்தையும், பல வேலைகளை ஒரேநேரத்தில் செய்யும் ‘மல்ட்டி டாஸ்கை’ இந்த ‘அல்ட்ரா மாடல்’ வழங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. இந்த வகை போன்களுக்கான போட்டியில் ‘கூகுள்’, ‘மோட்டோரோலா’, ‘விவோ’, ‘ஓபோ’ ஆகிய நிறுவனங்களுக்குச் சவாலாக புதிய மாடல்களை மிகத் தரமாக அறிமுகப்படுத்தி சாம்சங் முன்னணியில் இருக்கிறது.

உலகளவில் ஃபோல்டிங் மொபைல் சந்தை பங்கீட்டில் சாம்சங் 40 சதவீதத்தையும், ஹூவாய் 30% சந்தையையும் வைத்துள்ளன என்று கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு தெரிவிக்கிறது.

ஆப்பிள் நிறுவனமும் ஃபோல்டபிள் போனின் முதல் மாடலை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. ஃபோல்டபிள் ஐபோன் நிச்சயம் இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தையும், விற்பனையில் சக்கைபோடு போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இந்த வகை போன்களுக்கான சந்தை 30 லட்சத்தைக் கடக்கும், இறக்குமதியும் 8% அதிகரிக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையின் நிலை என்ன?

ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களுக்கான இந்தியச் சந்தையில் கோலோச்சி வரும் நிறுவனம் சாம்சங் மட்டும்தான். மடித்து விரிக்கக் கூடிய மொபைல், பிளிப் டைப் மொபைல் என இரண்டிலும் சாம்சங் நிறுவனம் அதிக மாடல்களை வெளியிட்டு, போட்டி நிறுவனங்களை திணற வைக்கிறது.

இந்த வகை போன்களின் வடிவமைப்பு, நீண்டகால உழைக்கும் திறன், தினசரி பயன்பாட்டுக்கு ஒத்துழைக்கும் வகையில் இருத்தல் ஆகியவற்றில் சாம்சங் நீண்டகால ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு விற்பனையில் ஏறக்குறைய 89 சதவீதப் பங்களிப்பை சாம்சங் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் நிறுவனமும் இதுவரை 2 மாடல்களில் அறிமுகம் செய்தாலும், சர்வீஸ் இல்லாததால் வரவேற்பு இல்லை. விவோ நிறுவனம் வெளியிட்ட 2 மாடல்களிலும் வசதிகள், அம்சங்கள் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மோட்டோரோலா, ஓபோ நிறுவனங்கள் தனது முதல் மாடலை கடந்த மே மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தாலும் பெரிதாக வரவேற்பு இல்லை.

சவால்கள் என்னென்ன?

ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் அதன் நீடித்த உழைப்பு மற்றும் நேர்த்தி ஆகியவற்றில் சோதிக்கப்பட்டுள்ளன. விலை உயர்ந்த, பெரிய சைஸில் மடிக்கக்கூடிய போன்களைப் பயன்படுத்தும்போது தினசரி ஏராளமான முறை மடிக்கவும், மீண்டும் திறக்கவும் வேண்டும். இப்படிச் செய்தால் எளிதில் உடைந்துவிடுமோ என்று வாடிக்கையாளர்கள் கருதுகிறார்கள்.

இந்த வகைப் போன்களில் மடக்கும் இடத்தில் இருக்கும் ‘சென்டர் கிரீஸ்’ பகுதிதான் சவாலானது. தினசரி நூற்றுக்கணக்கான முறை மடிக்கும்போது, அந்தப் பகுதி ஆழமாகி, செயல்திறன் குறைந்து, திரை சேதமடையலாம் என அச்சம் ஏற்படுகிறது.

இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் இப்போது ஃபோல்டபிள் போன்கள் வந்துள்ளன. எண்ணற்ற முறை மடித்து விரிக்கும் செயல்பாட்டை தாங்கும் வலிமையான ‘ஹிங்’ மெக்கானிசம் இருப்பதால் 4 முதல் 5 ஆண்டுகள் வரை உழைக்கும்.

புத்தக வடிவில் மடித்து விரிக்கக் கூடிய போன்களையே மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இவை மிடுக்காகவும், ஏஐ நுட்பத்தையும் கொண்டிருப்பது காரணம். அதிலும் ‘பார்’ வடிவில் தட்டையாக இருப்பதால் கவர் ஸ்கிரீனிலேயே பெரும்பாலான பணிகளை செய்ய முடியும். ஏதேனும் முக்கிய தகவல், புகைப்படம், எடிட் செய்ய வேண்டுமென்றால் மட்டுமே பிரதானத் திரையை பயனர்கள் பயன்படுத்துகிறார்கள்.

இந்த மொபைல்களுக்கு திரையின் அளவும், சப்போர்ட் செய்யும் செயலிகளும் சவால்தான். ஆனாலும், தடைகளைக் கடந்து, குறைகளை களைந்து, மடிப்புத், பிரதானத் திரைக்கு ஏற்றார்போல் ஸ்மார்ட்போனை உருவாக்கிய ஒரே நிறுவனம் சாம்சங் மட்டும்தான்.

வளர்ச்சி, பரிணாமம் எப்படி?

தனியுரிமை சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், ஃபோல்டபிள் போன்களில் இயங்கும் ஏஐ தொழில்நுட்பம், முக்கியத் தேர்வாகவும், வரவேற்கும் விதத்திலும் இருக்கிறது. விலை அதிகமான ஃபோல்டபிள் போன்களில் பயன்படுத்தப்பட்டுள்ள என்பியூ (NPU) சிறந்த செயல்திறனையும், ‘க்ளவ்ட்’ சார்ந்திருப்பதையும் குறைக்கிறது.

பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யவும், இதில் இருக்கும் செயலிகள், ‘லேஅவுட் சப்போர்ட்’ எளிதாக பணியைக் கையாள முடிகிறது. கருத்துரு உருவாக்குதல், வடிவமைத்தல், எடிட்டிங் ஆகியவை ஃபோல்டபிள் மொபைலில் எளிதாகச் செய்யலாம். ‘ஸ்பிலிட் ஸ்க்ரீன்’ வசதிகள், குரல்பதிவு, ஏஐ நுட்பம் ஆகியவை கார்ப்பரேட் நிறுவன பயனர்களுக்கு அப்பாலும் ரசிகர்களை பெற்றுள்ளன.

எதிர்காலம் என்ன?

இந்தியாவில் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. ‘பிளிப் போன்கள்’ போல் அல்ல. ‘கூகுள்’, ‘விவோ’, ‘மோட்டோரோலா’, ‘ஆப்பிள்’ ஆகிய நிறுவனங்களிடமிருந்து அடுத்த தலைமுறை ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக இருக்கின்றன.

இந்த வகை போன்கள் பிரிவில் சாம்சங் நிறுவனம் வலுவாகக் காலூன்றிவிட்டது.

கூகுள் போன்களைப் பொறுத்தவரை ஃபோல்டபிள் போன்களுக்கான தனிச் செயலிகளை மேம்படுத்த வேண்டும், தனியாக ஷோரூம்கள், சர்வீஸ் வசதிகளை உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளது.

விவோ நிறுவத்தின் போன்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தபோதிலும், நம்பிக்கையுடன் தொடர்ந்து சந்தைப்படுத்தினால் சாம்சங்குக்கு போட்டியளிக்கலாம். ஸ்டைலான பிளிப்மாடலில் கவனம் செலுத்தி வரும் மோட்டரோலா நிறுவனம் முதல் மாடலை இறக்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் போன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் எளிதில் உடையும் ஆடம்பரப் பொருள் என்ற நிலையிலிருந்து மாறி, அன்றாடம் பயன்பாட்டுக் கருவிகளாக மாறியுள்ளன. அவற்றின் நிலையை செயற்கை நுண்ணறிவு மேலும் வலுப்படுத்த உதவும்.

‘ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்’ ரேஸில் இந்தியாவில் முந்துவது யார்?  - ஒரு டெக் பார்வை
ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டது அரசு!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in