

கோப்புப்படம்
சென்னை: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை பெருவெளியில் ரூ.100 கோடி செலவில் சர்வதேச மையம் அமைக்க கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்தியஞான சபை முன்பாக சுமார் 71 ஏக்கர் பரப்பில் உள்ள பெருவெளியில் ரூ.100 கோடி செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு, கடந்த 2023 அக்.5-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கிய நிலையில், பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்துக்கு ஆதரவாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
அதேபோல, வள்ளலார் சத்தியஞான சபையில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் முதியோர் இல்லம், சித்த மருத்துவமனை உள்ளிட்ட கட்டுமானங்களுக்காக விவசாய விளைநிலங்களை வகை மாற்றம் செய்ததை எதிர்த்தும் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், தடையில்லாச் சான்று பெறுவதில் உள்ள விதிமீறல்களை சுட்டிக்காட்டி, மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை வள்ளலார் பெருவெளியில் சர்வதேச மையம் தொடர்பாக எந்த ஒரு கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்கால தடை விதித்தனர்.
அதேநேரம், வள்ளலார் கோயிலில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள நிலத்தை வகைமாற்றம் செய்வது தொடர்பாக நகரமைப்பு இயக்குநர் உரிய விதிகளை கடைபிடித்து ஒப்புதல் வழங்கியுள்ளதால், அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எஸ்.சவுந்தர் அமர்வில் இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.பரணிதரன், “வள்ளலார் பெருவெளியில் ரூ.100 கோடி செலவில் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுவிட்டது.
பெருவெளியில் வள்ளலார் ஜோதி தரிசனத்துக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்தாத வகையில், மாற்று இடத்தில் நூலகம், கூட்டரங்கம், யோகசாலை, முதியோர் இல்லம் போன்றவை கட்டும் வகையில் விரைவில் மாற்றுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக, தற்போது சத்தியஞான சபை வசம் உள்ள 71 ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க சுற்றுச்சுவர் அமைக்க உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “வடலூரில் சர்வதேச மையம் அமைப்பதற்காக பெருவெளியில் தோண்டப்பட்ட குழிகளை மூடி, பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். மாற்று இடத்தில் நூலகம், யோகசாலை, முதியோர் இல்லம் அமைப்பது அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டது. 71 ஏக்கர் நிலத்தை சுற்றிலும் சுவர் எழுப்பும் பணிகளை உடனே தொடங்கலாம்” என்று அனுமதி அளித்து, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.