

சென்னை: சென்னையில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக நேற்று ‘விதிமீறல்களற்ற நாள் (நோ டாலரன்ஸ் டே)’ கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, மாநகரின் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து போலீஸார் சிறப்புத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
சென்னையில் சாலை விபத்துகளைக் குறைத்து, வாகன ஓட்டிகளிடையே போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தச் சிறப்புத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, மாநகரின் அனைத்து முக்கியச் சாலைகள் மற்றும் பிரதான சாலைகளில் நேற்று காலை முதல் போக்குவரத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
போக்குவரத்துக் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தச் சோதனையின்போது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களைத் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் உரிய வாகன ஆவணங்கள் இல்லாதவர்களும் சோதனையில் சிக்கினர்.
ஆவணங்கள் இல்லாத சில வாகனங்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். நான்கு சக்கர வாகனங்களில் பயணித்தவர்களிடம் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
காவலர்களுக்கும் அபராதம்: இந்தச் சிறப்புத் தணிக்கையின்போது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்ற சில காவலர்களும் போக்குவரத்துப் போலீஸாரின் சோதனையில் சிக்கினர். அவர்களுக்கும் விதிமுறைப்படி அபராதம் விதிக்கப்பட்டது.