

மதுரையில் கைது செய்யப்பட்ட மாரிதாஸ்
சென்னை: தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக, பிரபல யூடியூபர் மாரிதாஸை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் மதுரையில் கைது செய்தனர்.
பிரபல யூ டியூப்பர் மாரிதாஸ். இவர், அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துகளை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் அரசுக்கு எதிராக சில பதிவுகளை வெளியிட்டது தொடர்பாக போலீஸார் அவரை கைது செய்தனர். தற்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்கள் குறித்து விமர்சித்து வீடியோ வெளியிட்டார். சமீபத்தில் கூடதனது யூடியூப்பக்கத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குறித்து விமர்சித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அமைச்சரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் மட்டும் அல்லாமல் இழிவாகவும், ஆபாசமாகவும் கருத்து பதிவிட்டதாக மாரிதாஸ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்த காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் மதுரை கடச்சனேந்தல் பகுதியிலுள்ள அவரது சகோதரர் வீட்டில் மாரிதாஸ் தங்கி இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து காவல் உதவி ஆணையர் வெற்றிவேந்தன் தலைமையில் 10-க்கும்மேற்பட்ட போலீஸார் நேற்று காலை மதுரை சென்றனர். பின்னர் உள்ளூர் போலீஸார் உதவியுடன் மாரிதாஸை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாரிதாஸ் கைதுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனம் எழுந்துள்ளது.
அதிமுக எக்ஸ் பதிவு: மாரிதாஸை விசாரிக்க வேண்டும் என்றால் நோட்டீஸ் கொடுத்து அழைத்திருக்கலாமே, எதற்கு கைது செய்ய துடிக்கிறீர்கள், ஜனநாயகக் குரலை நெறிக்க முயலும் பொய்க்கால் குதிரை அரசின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்துக்குரியது.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயலை இத்துடன் நிறுத்திவிட்டு, விமர்சனங்களை எதிர்கொண்டு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முதல்வர் முன்னெடுக்க வேண்டும்.
பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை: ஆட்சியில் குறைபாடுகள் இருப்பதாக தகுந்த தரவுகளுடன் கூறி, அதனை திருத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் மாரிதாஸ் குறிப்பிட்டார். அதற்காக அவர் கைது செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: மாரிதாஸின் கருத்துகள் அவதூறானவை எனக் கருதினால் சட்டப்படியாக வழக்குத்தொடுக்கலாம். மாறாக, கைது என்பது ஜனநாயக விரோதம். முந்தைய திமுக அரசு செய்த கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் அதே செயலை தவெக அரசும் தொடர்வதற்கு பெயர்தான் தூய சக்தியா?