நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம்

உயரிய ஊக்கத் தொகை வழங்கி பாராட்டினார் முதல்வர் விஜய்
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உயரிய ஊக்கத் தொகை ரூ.50 லட்சத்துக்கான காசோலையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் நேற்று வழங்கினார். உடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, பிரக்ஞானந்தாவின் பெற்றோர்.

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உயரிய ஊக்கத் தொகை ரூ.50 லட்சத்துக்கான காசோலையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் நேற்று வழங்கினார். உடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, பிரக்ஞானந்தாவின் பெற்றோர்.

Updated on
2 min read

சென்னை: நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ள பிரக்ஞானந்தா, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் விஜய் ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத் தொகை வழங்கி பாராட்டினார்.

உலகப் புகழ்பெற்ற நார்வே செஸ்தொடர் - 2026, ஆஸ்லோவில் சமீபத்தில் நடைபெற்றது. இதன் கடைசி மற்றும் 10-வது சுற்று ஆட்டங்கள் கடந்த 5-ம் தேதி

இரவு நடைபெற்றன. இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் மோதினார். இதில், 45-வது நகர்த்தலின்போது பிரக்ஞானந்தா வெற்றி பெற்று முழுமையாக 3 புள்ளிகளைப் பெற்றார். ஒட்டுமொத்தமாக 18 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.

6 வீரர்கள் கலந்துகொண்ட இந்த தொடரில் உலகின் முதல்நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை இரு முறை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்திஇருந்தார். இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு இந்திய மதிப்பில் ரூ.70 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து அவருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை பிரக்ஞானந்தா நேற்று சந்தித்தார். நார்வே செஸ் தொடரில் வெற்றி பெற்றதற்காக வழங்கப்பட்ட கோப்பையை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். இதைத் தொடர்ந்து, அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உயரிய ஊக்கத் தொகை ரூ.50 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் விஜய் வழங்கிப் பாராட்டினார். தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, பிரக்ஞானந்தாவின் பெற்றோர் ரமேஷ்பாபு - நாகலட்சுமி ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.

பிறகு, செய்தியாளர்களிடம் பிரக்ஞானந்தா கூறியதாவது: நார்வே செஸ் தொடரில் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளதாக முதல்வர் விஜய் என்னைப் பாராட்டினார். இதேபோல, தொடர்ந்து வரும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி, நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்ப்பேன். விளையாட்டுவீரர்களுக்கு அரசு முக்கியத்துவம் அளித்துவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தின்கீழ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ஆண்டுதோறும் ரூ.30 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. செஸ் விளையாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சென்னை நேருவிளையாட்டு அரங்கில் ‘ஹோம் ஆஃப் செஸ்’ என்ற சதுரங்க அகாடமி நிறுவப்பட்டுள்ளது. இளம் வீரர்களை உற்சாகப்படுத்தி, கிராண்ட் மாஸ்டர் போன்ற உயரிய பட்டங்களைப் பெறுவதற்காக பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கிராண்ட் மாஸ்டருடன் செஸ் விளையாடி முதல்வர் உற்சாகம்: சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த சந்திப்பின்போது, கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் முதல்வர் விஜய், செஸ் விளையாடி மகிழ்ந்தார். சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் இறுதியில் முதல்வர் விஜய்க்கு பிரக்ஞானந்தா ‘செக் மேட்’ வைத்து வெற்றி பெற்றார். ‘‘முதல்வரே என்னுடன் செஸ் விளையாடியது நல்ல அனுபவம். அவர் இவ்வளவு நன்கு விளையாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. அது சிறப்பான ஆட்டமாக இருந்தது’’ என்று பிரக்ஞானந்தா கூறினார். அவருடன் முதல்வர் விஜய் செஸ் விளையாடும் காட்சி, வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

<div class="paragraphs"><p>நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உயரிய ஊக்கத் தொகை ரூ.50 லட்சத்துக்கான காசோலையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் நேற்று வழங்கினார். உடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, பிரக்ஞானந்தாவின் பெற்றோர். </p></div>
தவெக வலைவீச்சில் அல்லாடும் அதிமுக - என்ன செய்யப் போகிறார் பழனிசாமி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in