

சென்னை: சென்னை - நந்தனம் அரசு கல்லூரி கேன்டீனில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக கல்லூரி கேன்டீன் உரிமையாளர், மாஸ்டர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரி வளாகத்தில் கேன்டீனும் செயல்பட்டு வருகிறது. இதை முத்துச்செல்வம் (48) என்பவர் நடத்தி வருகிறார். இந்த கேன்டீனில் 22 வயதுடைய இளம்பெண் ஒருவர், அண்மையில் வேலைக்கு அமர்த்தப்பட்டார். மேலும் அந்த பெண் அங்கேயே தங்கியும் இருந்தார்.
இந்தப் பெண்ணின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி கேன்டீன் உரிமையாளர் முத்துச்செல்வம், கேன்டீன் மாஸ்டர் குணசேகரன் (38) இவர்களது நண்பர் கார்த்திகேயன் (56) ஆகியோர் மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் அடிக்கடி கேன்டீன், கல்லூரி வளாகத்தில் உள்ள அறை ஆகியவற்றில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்தப் பெண், கல்லூரி காவலாளியிடம் கண்ணீருடன் முறையிட்டுள்ளார். இதையடுத்து சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீஸார் பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து முத்துச்செல்வம், குணசேகரன், கார்த்திகேயன் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். பாதிப்புக்கு உள்ளான பெண்ணுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:
“நந்தனம் அரசுக் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள கேன்டீனில் பணிக்கு சேர்ந்த பெண் ஒருவரை, கல்லூரி வளாகத்திலேயே வைத்து கேன்டீன் மாஸ்டர் மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. தமிழ்நாட்டில் நாள்தோறும் கொடுரமான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது.
அரசுக் கல்லூரியின் கேன்டீனில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரே என்பது குறித்து கேட்டால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதே தெரியாது என்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். அவரின் அக்கறையற்ற பேச்சு வேதனைக்குரியது மட்டுமல்ல, கண்டனத்துக்கு உரியதும் கூட. ஆயிரம் முறை நான் மீண்டும் மீண்டும் கூறிவருவதை போல திமுக ஆட்சியில் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிப்போயுள்ளதையே இந்த தொடர் சம்பவங்கள் அழுத்தமாக நிரூபித்துள்ளது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்:
“கடந்த சில தினங்களுக்கு முன்பு தரமணி கல்லூரியின் காவலாளியாகப் பணியாற்றி வந்த வடமாநில இளைஞரின் மனைவியைச் சிலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து வீசிய கொடூரத்தின் ரணம் ஆறும் முன், இன்று சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியின் உணவகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவரை, கல்லூரி வளாகத்திற்குள் வைத்தே கேன்டீன் மாஸ்டர் உள்ளிட்ட சிலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.
சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கும் திமுகவின் அவல ஆட்சியில், பாலியல் வன்கொடுமைகள் குறித்த செய்திகளுடன் தான் நமது தினசரி பொழுதே விடிகிறது. இதுதான் திமுகவின் விடியல் ஆட்சியா? அறநெறி போதிக்க வேண்டிய கல்விக்கூடங்களைக் காமுகர்களின் கூடாரமாக மாற்றியது தான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா?
பெண்களுக்கெதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என விளம்பர வசனம் பேசிய முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில், இதுவரை இல்லாதளவிற்குத் தமிழகத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன. இப்படியொரு பெண்கள் விரோத ஆட்சிக்குத் தமிழக மக்கள் சமாதி கட்டப்போகும் காலம் நெருங்கிவிட்டது” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்:
“சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் உணவக விடுதியில் பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அரங்கேறியிருக்கும் இந்த சம்பவம் தமிழகம் எந்தவகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்பதை மீண்டும், மீண்டும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் பெருகிக் கொண்டிருக்கும் தமிழகத்தை, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு மேடை முழங்கிக் கொண்டிருப்பது அவரின் அறியாமையையே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய்:
“தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியும் அவர் மனைவியும் குழந்தையும் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், நந்தனத்தில் அரசுக் கல்லூரி கேண்டீனில் பணிபுரிந்த இளம்பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன.
கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுப்பதிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் இந்த ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனால்தான் கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டிய அரசு, மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதால், கொடுங்குற்றங்களில் ஈடுபடச் சமூக விரோதக் கும்பல்களுக்குத் துணிச்சல் வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தர உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், முதல்வர் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்றும், எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்றும் வாய்கூசாமல் பொய்யையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.
ஆட்சியின் இறுதிக் கால நாள்களை எண்ணிக்கொண்டிருக்கும் முதல்வர் அவர்கள், இனி இருக்கும் கொஞ்சம் நாள்களிலாவது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்களுக்கு எதிரான, மக்களுக்குக் கொஞ்சமும் பாதுகாப்பே இல்லாத, இந்த வெற்று விளம்பர மாடல் ஆட்சிக்கு முடிவுரை எழுதத் தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்” என்று விஜய் கூறியுள்ளார்.
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்:
“சென்னை நந்தனத்தில் இயங்கிவரும் அரசு கலைக் கல்லூரியில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சை உலுக்குகின்றன. பாதிக்கப்பட்ட பெண் முழு மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் இந்த அதிர்ச்சியில் இருந்து விரைவில் மீண்டு வர இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். பெண்களை வெறும் சதைக் குவியலாக கொச்சைப்படுத்தி பேசுபவர்களை நட்சத்திரப் பேச்சாளர்களாகக் கொண்டாடும் திமுக எனும் கட்சியிடம் ஆட்சி அதிகாரம் கிடைத்தால், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதற்கான மற்றுமொரு சான்று இது.
தமிழகத்தில் பெருகி வரும் பாலியல் குற்றங்களால் வெளியில் தலைகாட்டவே பெண்கள் பயந்து நடுங்கும் ஒரு கேவலமான ஆட்சியை நடத்திக் கொண்டு, “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற பெயரில் விளம்பர விழா எடுக்க முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும். அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகள் என அரசு இயந்திரத்தின் அனைத்து அங்கங்களையும் கயவர்கள் அரித்தெடுத்துக் கொண்டிருப்பதை அமைதியாக வேடிக்கை பார்ப்பதைத் தவிர திமுக அரசு வேறு எதையும் சாதித்துவிடவில்லை. தங்கள் அலட்சியப்போக்கால் ஒட்டுமொத்த தமிழகப் பெண்களின் பாதுகாப்பையே கயவர்களிடம் அடகுவைத்த திமுகவின் அவல ஆட்சியை அரியணையில் இருந்து அகற்றும் வரை மக்கள் ஓயமாட்டார்கள்” என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.