“நீங்கள் தொடர்ந்து அரசியலையே முன்வைக்கிறீர்கள்!” - விஜய் மீது டி.ஆர்.பி.ராஜா விமர்சனம்

டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா
Updated on
2 min read

புதுச்சேரி: “நாங்கள் வளர்ச்சியை முன்வைக்கின்றோம், நீங்கள் தொடர்ந்து அரசியலையே முன்வைக்கிறீர்கள். இந்தியா மட்டுமின்றி உலகமே வியக்கும் வகையில் தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறார்” என தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு தமிழக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலளித்தார்.

புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் இன்று நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி கூறியது: “புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் திமுக உடன்பிறப்புகள் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் புதுச்சேரியின் நிலவரத்தை கேட்டு அறிந்து கொண்டிருக்கிறார். திமுகவை கட்டிக் காக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு ஆலோசனைகளை எங்களுக்கு தந்து கொண்டிருக்கிறார்” என்றார்.

அப்போது, மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக திமுவை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஜெகத்ரட்சகன், “அவர் விரக்தியின் அடிப்படையில் பேசி வருகின்றார். அதற்கு நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

‘புதுச்சேரியில் திராவிட மாடல் அமையுமா?’ என்ற கேள்விக்கு, “நூற்றுக்கு இருநூறு சதவீதம் அமையும் என்றார். திராவிட மாடல் ஆட்சி திமுக தலைமையிலா என்று கேட்டதற்கு, “அதையெல்லாம் எங்கள் தலைவர் முடிவெடுப்பார். நாங்கள் சாதாரண தொண்டர்கள்தான்” எனக் கூறினார்.

புதுச்சேரியில் ஜேசிஎம் என்ற அமைப்பு புதிதாக வந்துள்ள நிலையில், திமுக உங்களை முதல்வர் வேட்பாளராக களம் இறக்கி உள்ளதாக பேசப்படுகிறதே என்று கேட்டபோது, “முதல்வர் வேட்பாளரெல்லாம் இல்லை. என்னை இங்கு வேலை செய்ய அனுப்பியுள்ளனர். நான் என்னுடைய பணியை செய்கின்றேன்” என்று கூறினார்.

புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கத்துக்கு தமிழக அரசு நிலம் வழங்கவில்லை என்று புதுச்சேரி அரசு கூறி வருவது குறித்து கேட்டபோது, ஜெகத்ரட்சகன் உடனிருந்த தமிழக தொழில்துறை அமைச்சரும், திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாருமான டி.ஆர்.பி.ராஜா, “விமான நிலையம் விரிவாக்கம் பணியை தொடங்குவதே நாங்கள் தான். நிச்சயம் இங்கு திமுக ஆட்சி அமையும்போது விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் தொழிற்பூங்கா அமைக்கப்படும்” என்றார்

திமுக நம்ப வைத்து ஏமாற்றும் என்று புதுச்சேரிக்கு வந்த தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து கேட்டபோது, “நாங்கள் வளர்ச்சியை முன்வைக்கின்றோம், நீங்கள் தொடர்ந்து அரசியலையே முன்வைக்கிறீர்கள். இந்தியா மட்டுமின்றி உலகமே வியக்கும் வகையில் தமிழகத்தில் திமுக ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி காட்டி, அதன் மூலம் மக்களுக்கு பயன் வந்துள்ளது.

2011-ல் கருணாநிதி விட்டுச் சென்றபோது 13 விழுக்காடு இருந்த வளர்ச்சி 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி, கரோனா காலம் இருந்தபோதும், மத்திய அரசின் எந்தவொரு ஒத்துழைப்பும் இல்லாமல் 16 சதவீதம் வளர்ச்சியை திமுக தலைவர் நிரூபித்துக்காட்டியுள்ளார். இதனை மத்திய அரசே தெரிவித்துள்ளது. இந்த ஆட்சி புதுச்சேரியிலும் மலர வேண்டும் என்று மக்கள் கேட்கின்றனர்.

எங்களுக்கு ஆக்கப்பூர்வாக பேசித்தான் பழக்கம், சும்மா அரசியல் பேசி வீண். தமிழகத்தில் கண்ணியமிக்க, ஆக்கப்பூர்வமான ஆட்சியை எங்கள் கட்சி தலைவர் செய்து கொண்டிருக்கிறார். அது புதுச்சேரிக்கும் வர வேண்டும்” என்றார்.

மூடப்பட்ட 3 பஞ்சாலைகள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திறக்கப்படும் என்று கூறுகிறீர்கள், கடந்த 5 ஆண்டுகள் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் இருந்தது அப்போது ஏன் திறக்கவில்லை என்று கேட்டபோது, “ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டங்களுக்கான அனுபவம் வருகிறது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு காலம் எந்த வளர்ச்சியும் இல்லை. அதை தமிழக முதல்வர் மாற்றியுள்ளார்.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் நான் முதல்வன், புதுமை பெண், விடியல் பயணம் உள்ளிட்ட திட்டங்கள் இங்கும் வர வேண்டும். புதுச்சேரி மண்ணுக்கு தேவையான தொழில்கள், சுற்றுலா போன்றவற்றை கொண்டு வந்து வளர்ச்சியை ஏற்படுத்துவோம்” என்றார்.

புதுச்சேரியில் கடந்த நான்கரையாண்டில் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி எப்படி இருக்கிறது என்று கேட்டபோது, “யாருடைய ஆட்சியாக இருந்தாலும், இந்தியாவில் நம்பர் ஒன் ஆட்சி திமுக ஆட்சிதான். அதில் சந்தேகம் இல்லை. திமுக ஆட்சி வர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். நிச்சயம் இங்கு திமுக ஆட்சி மலரும்” என்றார்.

டி.ஆர்.பி.ராஜா
“கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை” - திருவனந்தபுரம் பாஜக வெற்றிக்கு பிரதமர் மோடி ரியாக்‌ஷன்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in