

பிரதமர் நரேந்திர மோடி| கோப்புப்படம்
புது டெல்லி: கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மற்றும் என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்களித்த கேரள மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
கேரளா உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் அதிக இடங்களில் வெற்றி பெற்று வருகிறது. ஆளும் எல்டிஎஃப் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மற்றும் என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றி. கேரள மக்கள் யுடிஎஃப் மற்றும் எல்டிஎஃப் மீது சலிப்படைந்துவிட்டனர். நல்லாட்சியை வழங்கி, அனைவருக்கும் வாய்ப்புகளுடன் ஒரு வளர்ந்த கேரளத்தை உருவாக்கக்கூடிய ஒரே தேர்வாக என்டிஏ-வை மக்கள் பார்க்கிறார்கள்.
திருவனந்தபுரத்துக்கு நன்றி. திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக-என்டிஏ பெற்ற இந்த வெற்றி, கேரள அரசியலில் ஒரு திருப்புமுனையாகும். மாநிலத்தின் வளர்ச்சிக்கான இலக்குகளை எங்கள் கட்சியால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். எங்கள் கட்சி இந்த துடிப்பான நகரத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் பாடுபடும்.
மக்களிடையே பணியாற்றிய, கடினமாக உழைத்த அனைத்து பாஜக தொண்டர்களுக்கும் எனது நன்றி. இதுவே திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஓர் அற்புதமான முடிவை உறுதி செய்துள்ளது.
இன்று, கேரளாவில் அடிமட்ட அளவில் தலைமுறை தலைமுறையாக பணியாற்றிய தொண்டர்களின் உழைப்பையும் தியாகங்களையும் நினைவுகூர வேண்டிய நாள். அவர்களின் உழைப்பே இன்றைய இந்த முடிவு நிஜமாகியதை உறுதி செய்தது. எங்கள் தொண்டர்களே எங்கள் பலம், அவர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.