எழுத்தாளர் பூமணி மறைவுக்கு முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் புகழ் அஞ்சலி

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி

Updated on
2 min read

சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி மறைவுக்கு முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டவர் பல்வேறு சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய அஞ்ஞாடி என்ற நாவலுக்காக 2014ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. மேலும் 1982ல் வெளியானன இவரது ‘வெக்கை’ நாவல், வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமாக வெளிவந்தது. இதனிடையே, அவரது மறைவுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில்: ”சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமான பூலித் துரை மாணிக்கவாசகம் எனும் பூமணி காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. பூமணி கரிசல் நிலத்தின் மண் வாசனையும், அடித்தட்டு மக்களின் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களும், வரலாற்றின் ஆழமான சாட்சியங்களும் நிரம்பிய படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளி ஆவார். அவரது 'அஞ்ஞாடி' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றது, அவரது இலக்கிய ஆளுமைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும்.

மேலும், அவரது 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'அசுரன்' திரைப்படம், அவரது எழுத்தின் வீச்சை உலகறியச் செய்தது. பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கியத் துறையில் பூமணியின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.” என்று கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “கரிசல் நிலத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான பூமணியின் மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன். கரிசல்காட்டு மக்களின் வாழ்க்கையையும் சமூகத்தில் நிலவிய கட்டமைப்புகளையும் மிக எளிமையான மொழியில் வெளிப்படுத்திய படைப்பாளராகத் பூமணி திகழ்ந்தார். தமிழின் எந்த அகராதியிலும் பதிவாகாத பல வட்டார வழக்குச் சொற்கள் அவரது படைப்புகள் மூலமாக ஆவணப்படுத்தப்பட்டன. பூமணிக்கு சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றுத் தந்த 'அஞ்ஞாடி' எனும் புதினத்தின் தலைப்பும் கூட அத்தகையதே.

எழுத்தாளராக மட்டுமின்றி, ‘கருவேலம் பூக்கள்’ எனும் திரைப் படத்தையும் எழுதி இயக்கித் தமிழக அரசின் விருதினைப் பெற்றிருக்கிறார். அவரது வெக்கை நாவல் அசுரன் திரைப்படமாக மாறியபோது, மேலும் பல இளம் வாசகர்களும் பூமணியின் எழுத்துகளைப் படிக்கத் தொடங்கினர். அவரது எழுத்துப் பணிகளைப் போற்றும் வகையில், திமுக ஆட்சியில் 2022ம் ஆண்டு கருணாநிதியின் பிறந்த நாளில் பூமணிக்கு கனவு இல்லம் திட்டத்தின் கீழ் குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணையை வழங்கி மகிழ்ந்ததையும் நினைவு கூர்கிறேன். இயல்பான நடையில் வீரியமான படைப்புகளைத் தந்து தமிழ் இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றிய பூமணியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: “சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் தலை சிறந்த படைப்பாளருமான பூமணி இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

மக்களின் வாழ்வியலையும், சமூகத்தின் உண்மை நிலைகளையும் தனது படைப்புகளின் மூலம் ஆழமாக பதிவு செய்து, தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த எழுத்தாளர் பூமணியை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக எழுத்தாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p><em>சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி</em></p></div>
மேலூர் அருகே ஆம்னி, அரசு பேருந்துகள் மோதி விபத்து: 5 பயணிகள் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in